323 கொள்கலன்கள் யாருடையது?

22.03.2025 08:12:14

எதிர்க்கட்சிகளின் பட்டியலை வெளியிடும் அரசாங்கம் தனது ஆட்சியில் சுங்கத்தின் பரிசோதனைகள் எதுவும் இல்லாமல் வெளியில் அனுப்பிய 323 கொள்கலன்கள் யாருடையது என்ற தகவலை இதுவரை வெளியிடவில்லை. அதனையும் வெளியிட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (21) இரண்டாவது நாளாக இடம் பெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

வரவு செலவு திட்டத்தில் வருமானத்தை சேகரிக்கும் வேலைத்திட்டம் தொடர்பில் அரசாங்க தரப்பில் இருந்து பெரிதாக தெரிவிக்கப்படவில்லை. ஜனாதிபதியும் வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிக்கும்போது வருமானங்களை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்ற அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை. அதேநேரம் அரசாங்கம் தேர்தல் காலத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் இருக்கின்றன.

குறிப்பாக வற்வரி நீக்குதல் உள்ளிட்ட பல்வேறுபட்ட வாக்குறுதிகள் இருக்கின்றன. அரசாங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் 103ஆம் பக்கத்தில் தேசிய உற்பத்திகளான முட்டை, பால், பாடசாலை உபகரணங்கள், விவசாய உரம், சஞ்சிகை, பாடசாலை புத்தகங்கள், கணணி உபகரணங்கள் உள்ளிட்ட இன்னும் பல அத்தியாவசிய பொருட்களின் வற் வரியை நூற்றுக்கு பூச்சியம் வீதாசாரத்துக்கு கொண்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதான் தேர்தல் காலத்தில் அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதி. இந்த வாக்குறுதியின் அடிப்படையிலே இந்த துறையில் இருக்கும் அதிகமானவர்கள் தேர்தலில் அரசாங்கத்துக்கு வாக்களித்திருந்தனர்.குறிப்பாக வற்வரியை பூச்சியத்துக்கு கொண்டுவருவதாகவும் அத்தியாவசிய பொருட்களின் வரியை நீக்குவதாகவும் தெரிவித்திருந்தார்கள். ஆனால் வற்வரி குறைக்கப்படவும் இல்லை. அதேநேரம் கணனி துறையில் இருப்பவர்கள் அவர்களின் உற்பத்திகள், தகவல்களை ஏற்றுமதி செய்யும்போது அதற்காக நூற்றுக்கு 15 சதவீத வரியை எதிர்வரும் முதலாம் திகதி முதல் விதித்திருக்கிறது. இவ்வாறு அரசாங்கத்தின் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக மீறி வருகின்றன.

மத்திய வங்கி பிணைமுறி விசாரணை அறிக்கையை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்து திருடர்களுக்கு தண்டனை காெடுப்பதாக தெரிவித்த அரசாங்கம், அதனை மறைப்பதற்கு தற்போது பட்டலந்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அதுவும் தற்போது அரசாங்கத்துக்கு எதிராக அமையும் நிலைக்கு வந்திருக்கிறது.

அரசாங்கம் திரையிடுவதாக தெரிவித்திருந்த சிங்கஹ பாகு படத்தை பார்ப்பதற்கே 68 இலட்சம் மக்கள் அரசாங்கத்திடம் பற்றுச்சீட்டு பெற்றுக்கொண்டார்கள். ஆனால் தற்போது அந்தரேயின் திரைப்படத்தையே பார்க்க வேண்டி இருக்கிறது.அதனால் அரசாங்கம் தெரிவித்த எதனையும் எதிர்பார்க்க முடியாது.

அதேபோன்று அரசாங்கம் அண்மைக்காலமாக எதிர்க்கட்சிகளின் ஒரு சில பட்டியல்களை வெளியிட்டு வந்தது. அதனை நாங்கள் வரவேற்கிறோம். அதேநேரம் அரசாங்கத்தின் ஆட்சியல் கடந்த இரண்டு மாதங்களுக்கு சுங்கத்தில் இருந்த 323 கொள்கலன்கள் எந்தவித பரிசோதனையும் இல்லாமல் வெளியில் அனுப்பப்பட்டிருக்கின்றன.

அந்த கொள்கலன்கள் யாருடையது? அதில் இருந்த பொருட்கள் எனன? என்ற விடயங்களை அரசாங்கம் இதுவரை வெளியிடவில்லை. அதனால் அந்த பட்டியலையும் அரசாங்கம் வெளியிட வேண்டும் என்றார்.