வடகொரியா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்திய ஜெலென்ஸ்கி!

04.11.2024 07:47:29

போர்க்களத்தில் வடகொரிய வீரர்கள் களமிறக்கப்படும் முன்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேற்கத்திய நாடுகளை உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார். உக்ரைன் போர் தொடங்கியதன் பின்னர் ரஷ்யாவின் மிகவும் சக்திவாய்ந்த தாக்குதல்களில் ஒன்றை தங்கள் ராணுவம் எதிர்கொள்வதாக உக்ரைன் தளபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

   

இந்த நிலையில், வட கொரிய துருப்புக்கள் பயிற்சி பெறும் முகாம்கள் மீது உக்ரேனிய தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்பை ஜெலென்ஸ்கி முன்வைத்துள்ளதுடன் அவர்களின் இருப்பிடம் தங்களுக்கு தெரியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் ரஷ்யாவிற்குள் தொலைதூர இலக்குகளைத் தாக்க மேற்கத்திய நாடுகளில் தயாரிக்கப்பட்ட நீண்ட தூர ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு நட்பு நாடுகளின் அனுமதியின்றி உக்ரைன் நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மனி என அனைவரும் அனைத்தையும் பார்க்கிறார்கள். வடகொரிய இராணுவம் உக்ரேனியர்களையும் தாக்கத் தொடங்கும் வரை அனைவரும் காத்திருக்கிறார்கள் என்றார்.

சுமார் 8,000 வட கொரிய வீரர்கள் தற்போது ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் உக்ரைனின் எல்லைக்கு அருகில் இருப்பதாக பைடன் நிர்வாகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. வரும் நாட்களில் உக்ரேனிய துருப்புக்களுக்கு எதிரான ரஷ்யாவின் போருக்கு உதவ தயாராகி வருகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளது.