இந்தியாவுக்கு அமெரிக்கா உத்தரவு.
ரஷ்யா மற்றும் ஈரான் மீதான கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு வழங்கப்பட்ட தற்காலிக தடையில்லா விலக்கு காலத்தை நீட்டிக்கப்போவதில்லை என அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது. இதனால் இந்தியா போன்ற நாடுகளுக்கு எரிசக்தி விநியோகத்தில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் நிலவும் போர்ப்பதற்றத்தால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. இதை சமாளிக்க, மார்ச் 11-க்கு முன் ஏற்றப்பட்ட ரஷ்ய எண்ணெய்க்கும், மார்ச் 20-க்கு முன் ஏற்றப்பட்ட ஈரான் எண்ணெய்க்கும் அமெரிக்கா 30 நாட்கள் சலுகை வழங்கியது. இதன் மூலம் ரிலையன்ஸ் உள்ளிட்ட இந்திய நிறுவனங்கள் சுமார் 3 கோடி பேரல் ரஷ்ய எண்ணெயை வாங்கின. மேலும், ஏழு ஆண்டுகளுக்கு பிறகு ஈரானிடமிருந்தும் கச்சா எண்ணெய் இந்தியாவிற்கு வந்தது.
தற்போது இந்த விலக்கு ஏப்ரல் 11 மற்றும் 19-ஆம் தேதிகளுடன் முடிவடைகிறது. ரஷ்யா தனது போர் செலவுகளுக்கு இந்த தொகையை பயன்படுத்துவதாக அமெரிக்காவின் ஜனநாயக கட்சியினர் விமர்சித்ததே இந்த முடிவுக்கு காரணம். 'அதிகபட்ச அழுத்தம்' என்ற கொள்கையின் கீழ் ஈரான் மீதான பிடியையும் அமெரிக்கா இறுக்குகிறது. இதனால் இந்தியா இனி மாற்று வழிகளை தேட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.