செப்ரெம்பெர் 11 பயங்கரவாத தாக்குதல்: ரகசிய ஆவணங்கள்

13.09.2021 09:19:32

அமெரிக்காவில் பயங்கர வாதிகளால் நடந்த தாக்கு தலின் 20வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படும் நிலையில், தாக்கு தல் தொடர்பான ரகசிய ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதில், சவுதி அரேபியாவுக்கு நேரடி தொடர்பு இருப்பது குறித்த எந்த ஆதாரமும் இல்லை.அமெரிக்காவின் நியூயார்க், வாஷிங்டன் உள்ளிட்ட நகரங்களில் 2001 செப்., 11ல் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.உத்தரவுஇந்த தாக்குதலில் ஈடுபட்ட 19 பேரில், அல் - குவைதா தலைவர் ஒசாமா பின்லேடன் உட்பட 15 பேர் சவுதி அரேபியாவைச் சேர்ந்தவர்கள்.அதனால் இந்த தாக்கு தலில் சவுதி அரேபிய அரசுக்கு நேரடி தொடர்பு இருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது.

இந்த தாக்குதல் தொடர்பான வழக்கு நீதிமன்றங்களில் நடந்து வருகிறது. தாக்குதல் தொடர்பான ரகசிய ஆவணங்களை அரசு வெளியிட வேண்டும் என, தாக்குதலில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.தாக்குதல் தொடர்பான ரகசிய ஆவணங்களை வெளியிடும்படி நீதித் துறை உள்ளிட்ட, தொடர்புடைய துறைகளுக்கு அதிபர் ஜோ பைடன் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தார்.
 

எந்த தகவலும் இல்லை


தாக்குதலின் 20ம் ஆண்டு நினைவு தினம் நேற்று முன்தினம் அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில், 16 பக்கங்கள் அடங்கிய ரகசிய ஆவணங்கள் முதல் கட்டமாக வெளியிடப்பட்டுள்ளன.ஆனால் அதில் சவுதி அரேபியாவுக்கு, தாக்குதலில் நேரடி தொடர்பு இருப்பது குறித்த எந்த தகவலும் இல்லை. தாக்குதல் நடந்த 2001 செப்.,க்கு முன்பாக, அந்தாண்டு பிப்.,ல் சவுதி அரேபியாவைச் சேர்ந்த நவாஸ் அல்ஹாஸ்மி, கலீத் அல்மிகாதர் ஆகியோர் தெற்கு கலிபோர்னியாவுக்கு வந்துள்ளனர்.இவர்கள் இருவரும் விமானங்களை கடத்தி தற்கொலைப் படையாக செயல்பட்டவர்கள்.அவர்களுக்கு, ஒமர் அல்பயோமி என்ற சவுதி அரேபியாவைச் சேர்ந்தவர், வீடு பார்த்து தருவது போன்ற உதவிகளை செய்துள்ளார். அமெரிக்காவில் மாணவராக இருந்த அவர், சவுதி அரேபியாவின் உளவு அமைப்புக்காக பணியாற்றி வந்ததாகவும் கூறப்படுகிறது.

ஜார்ஜ் புஷ் எச்சரிக்கை

பென்சில்வேனியாவில் நடந்த தாக்குதலின் 20வது ஆண்டு நினைவு நிகழ்ச்சியில், முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் பேசியதாவது:தற்போது நம் நாட்டில் மக்களிடையே பிளவு ஏற்பட்டுள்ளது. வன்முறை, பயங்கரவாதம் அதிகரித்துள்ளது. வெளிநாட்டு பயங்கரவாதிகளுக்கும், இவர்களுக்கும் இடையே பெரிய அளவு வேற்றுமை ஏதும் இல்லை. உயிரின் மதிப்பை உணராதவர்கள்.ஆனால் இது அமெரிக்காவின் உண்மையான அடையாளம் இல்லை. 2001ல் பயங்கரவாதிகள் விமானத்தை கடத்தி தாக்குதல் நடத்த முயன்றபோது, விமானத்தில் இருந்தவர்கள் அவர்களுடன் போராடியுள்ளனர். அதனால் அந்த விமானம், பென்சில்வேனியாவில் விழுந்து நொறுங்கியது.நாட்டுக்கு ஆபத்து என்றவுடன் அதை காப்பாற்ற வேண்டும் என உடனடியாக செயல்பட்ட அந்த தேசபக்தியே நம் நாட்டின் அடையாளம். இவ்வாறு அவர் பேசினார்
பைடன் அஞ்சலி

தாக்குதலின் 20வது ஆண்டையொட்டி, நினைவிடங்களில் அதிபர் ஜோ பைடன் அஞ்சலி செலுத்தினார்.முதலில் நியூயார்க்கில் உள்ள நினைவிடத்திலும், அடுத்து பென்சில்வேனியாவின் ஷேங்க்ஸ்விலேயில் உள்ள நினைவிடத்திலும் அஞ்சலி செலுத்தினார். பின்னர் வாஷிங்டனில் ராணுவத் தலைமையகமான பென்டகனில் உள்ள நினைவிடத்தில் அவர் அஞ்சலி செலுத்தினார்.