இதற்கெல்லாம் சுமந்திரனே காரணம்; உண்மைகளை அம்பலப்படுத்தும் சுரேஸ்பிறேமச்சந்திரன்!

11.09.2021 12:07:45

ஜநா அமர்விற்கு முன்னதாக அனைத்து கட்சிகளும் ஒன்று கூடி ஆராய்வதற்கு அழைப்பு விடுத்த போது அது முக்கியமற்றதென கூறிய எம்.ஏ.சுமந்திரன் அதன் பின்னர், இரா.சம்பந்தன் ஊடாக ஏன் ஜநாவிற்கு மகஜர் அனுப்பினார் என சுரேஸ்பிறேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார் .

யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், புலிகளின் போர்க்குற்றம் பற்றியும் சுட்டிக்காட்டும் இலங்கை தமிழ் அரசு கட்சியின் ஐ.நா ஆவணம் பற்றிய உண்மைகளை அம்பலப்படுத்திய அவர்,

பல தடவைகளாக ரெலோ ஊடாக எம்.ஏ.சுமந்திரனுடன் தொடர்புகொண்ட போதும் இழுத்தடிக்கப்பட்டதாலேயே கூட்டமைப்பின் பங்காளி கட்சிகள், சி.வி.விக்கினேஸ்வரன் தரப்புடன் இணைந்து மகஜரொன்றை தயாரித்ததாகவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன் இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள்ளிருந்து மற்றொரு ஆவணம் அனுப்ப மேற்கொள்ளப்பட்ட முயற்சி பற்றியும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை கிளிநொச்சியில் சி.சிறீதரன் தமிழரசு கட்சி முக்கியஸ்தர்கள் ஒன்பது பேரது மகஜரை தானே வடிவமைத்து ஒழுங்குபடுத்தியதாகவும் தானும் அதில் ஒப்பமிட்டதாகவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் அதேநேரம் எம்.ஏ.சுமந்திரன் தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர்களது கையெழுத்து போலியாக அம்மகஜரில் இடப்பட்டதாக கூறுகின்றார்.

இதில் ஒப்பமிட்டதாக சொன்ன சி.சிறீதரன் சொல்வது உண்மையா அல்லது அவர் போலியாக ஒப்பமிட்டதாக சொல்லும் எம்.ஏ.சுமந்திரன் உண்மையாவென்பது தெரியவில்லை. இந்நிலையில் ஊடகங்களை அழைத்து மக்களை ஏமாற்றவும் உட்கட்சி மோதல்கள் தொடர்பில் மக்களிடையே எழுந்துள்ள வெறுப்பை திசைதிருப்பவுமே எம்.ஏ.சுமந்திரன் நாடகம் ஆடியதாகவும் சுரேஸ்பிறேமச்சந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை அங்கயன் இராமநாதனிற்கும் எமது விடுதலைப்போராட்டத்திற்கும் தொடர்புகள் ஏதுமில்லையென கூறிய சுரேஸ் பிறேமச்சந்திரன், அவர் அமைதியாக தனது தொழில் முதலீடுகளையும் புதிய தொழில்களையும், வியாபாரத்தை பார்ப்பதும் பொருத்தமானதெனவும் விடுதலைப் போராட்டம் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இனஅழிப்பு பற்றி வாய் திறக்க அங்கயனிற்கு அருகதை இல்லையெனவும் கூறினார்.

இதேவேளை தமிழ் தரப்புக்களின் தலையீடுகளினால் ஐ.நாவினால் அரசிற்கு சங்கடங்கள் உருவாகிவிடுமென்பதால், ஆவணங்கள் அனுப்புவதற்கு எதிராக அங்கயன் இராமநாதன் கருத்து வெளிட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.