அமெரிக்காவில் காட்டுத்தீ: 3,00,000 ஏக்கர் பரப்பளவு தீக்கிரை- 2,000 குடியிருப்பாளர்கள் வெளியேற்றம் !

20.07.2021 21:44:43

 

அமெரிக்காவின் ஒரிகான் மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயில் 3,00,000 ஏக்கர் பரப்பளவு தீக்கிரையாகியுள்ளது.

அதிகமான காடுகளை தீக்கிரையாக்கிய இந்த காட்டுத்தீ, அமெரிக்க வரலாற்றில் இதுவரை ஏற்பட்ட மிகப்பெரிய காட்டுத் தீ சம்பவங்களில் ஒன்றாகும்.

‘பூட்லெக் தீ’ என்று அழைக்கப்படும் இக்காட்டுத் தீயினால் பெரும்பாலும் கிராமப்புறங்களில் இருந்து குறைந்தது 2,000 குடியிருப்பாளர்கள் வெளியேற கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். குறைந்தது 160 வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன.

ஜூலை 6ஆம் திகதி தொடங்கி, லொஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தை விடப் பெரிய பகுதியை இந்த காட்டுத்தீ ஏற்கனவே எரித்துவிட்டது.

அத்துடன், போர்ட்லேண்டின் தென்கிழக்கில் 300 மைல் (480 கி.மீ) எரியும் இந்த தீ 160க்கும் மேற்பட்ட கட்டடங்களை அழித்துள்ளது.

கிளமத் போல்ஸ் மற்றும் ரெட்மண்ட் உட்பட பல நகரங்களில் வசிப்பவர்களுக்காக இரண்டு வெளியேற்ற மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

13 அமெரிக்க மாநிலங்களில் பரவும் 80க்கும் மேற்பட்ட பெரிய தீக்களில் இதுவும் ஒன்றாகும். இது வெப்ப அலைகள் மற்றும் அதிக காற்று ஆகியவற்றால் தூண்டப்படுகிறது.

ஓரிகனின் வரலாற்றில் மிகப்பெரிய காட்டுத்தீ சம்பவமாக பார்க்கப்படும் இந்த தீயை அணைக்கப் 2,000க்கும் மேலான தீயணைப்பு படையினர் போராடி வருகின்றனர்.