நாளை திருமலைக்கு வரும் ஜெகன்மோகன் ரெட்டி.

27.09.2024 08:16:35

திருமலைக்கு நாளை முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி வர இருப்பதை அடுத்து, அவர் வேறு மதத்தைச் சேர்ந்தவர் என்பதால், ஏழுமலையான் மீது நம்பிக்கை உள்ளதாக தெரிவிக்கும் ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்திட்ட பிறகே அவர் அனுமதிக்கப்படுவார் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு கலந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ஜெகன்மோகன் ரெட்டி இதற்கு மறுப்பு தெரிவித்தார். முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பொய்யான குற்றச்சாட்டுகளால் திருப்பதியின் புனிதம் கெட்டுவிட்டது என்றும் இதற்காக பரிகார பூஜை செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

 

இந்த நிலையில், நாளை ஜெகன்மோகன் ரெட்டி திருமலைக்கு வர உள்ளதாக அவரது கட்சி தெரிவித்துள்ளது. இதனால், தேவஸ்தான அதிகாரிகள் சில நிபந்தனைகளை விதித்துள்ளனர். மாற்று மதத்தினர் திருமலைக்கு வருவதாக இருந்தால், ஏழுமலையான் மீது நம்பிக்கை உள்ளதாக தெரிவிக்கும் தேவஸ்தான ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்திட்ட பிறகே அனுமதி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

 

இந்த ஒப்பந்தத்தில் ஜெகன்மோகன் ரெட்டி கையெழுத்திடுவாரா என்பதை நாளை வரை காத்திருந்து தான் பார்க்க முடியும். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.