அமிதாப் பச்சனுக்கு காங்கிரஸ் நோட்டிஸ்

23.07.2024 07:08:00

இந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் ஒன்றிணைந்து நடித்திருக்கும் திரைப்படம் ‘கல்கி 2898 ஏ டி’. வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஜூன் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 

பிரம்மாண்டமாகவும், ஏராளமான பொருட்செலவிலும் எடுக்கப்பட்ட இந்தப் படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மகாபாரத குருசேத்திர போருக்கு பிறகு மகாபாரத கதாபாத்திரமான அஸ்வத்தாமன் எதற்காக உயிரோடு இருக்கிறார் என்பது பற்றியும், கலிகாலம் தொடங்கி 6000 வருடங்களுக்குப் பிறகும் உலகம் எப்படி இருக்கிறது என்பதைப் பற்றியும், கல்கி முதல் பாகத்தில் கதையாக சொல்லப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் இன்னும் சில மாதங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் உலகம் முழுவதும் ரூ.1000 கோடியை கடந்துள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாக தெரிவித்து இயக்குநர் நாக் அஸ்வின், பிரபாஸ், அமிதாப் பச்சன் மற்றும் தயாரிப்பாளர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மடாதிபதி ஆச்சார்ய பிரமோத் கிருஷ்ணம் என்பவர் நோட்டிஸ் அனுப்பியுள்ள நிலையில், “இந்தியா என்பது உணர்வுகள், நம்பிக்கை மற்றும் பக்தி நிறைந்த நாடு. சனாதான தர்மத்தின் மதிப்புகளை சிதைக்கக் கூடாது. அதன் வேதங்களை மாற்றக்கூடாது. கல்கி நாராயணன் நம் நம்பிக்கையின் மையத்தில் இருக்கிறார். இவர் விஷ்ணுவின் இறுதி அவதாரமாகக் கருதப்படுகிறார்.

புராணங்களில் கல்கியின் அவதாரம் பற்றி அதிகம் எழுதப்பட்டுள்ளது, அதன் அடிப்படையில் பிரதமர் மோடி பிப்ரவரி 19 அன்று ஸ்ரீ கல்கி தாமுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த படம் நமது வேதங்களில் விவரிக்கப்பட்டுள்ளதற்கு எதிராக இருக்கிறது. இந்தப் படம் நமது மத உணர்வுகளைப் புண்படுத்துகிறது. எனவே, நாங்கள் சில ஆட்சேபனைகளைக் குறிப்பிட்டுள்ளோம் மற்றும் பதிலுக்காக காத்திருக்கிறோம். இந்துக்களின் உணர்வுகளோடு விளையாடுவது சினிமாக்காரர்களுக்கு ஒரு பொழுதுபோக்காகிவிட்டது. துறவிகள் பேய்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். கருத்துச் சுதந்திரம் என்பது எங்கள் நம்பிக்கையுடன் விளையாடலாம் என்று அர்த்தமல்ல” என குறிப்பிடப்பட்டுள்ளது.