பெட்ரோல் வாங்க காத்திருந்த ஆட்டோ டிரைவர் மரணம்!

17.06.2022 07:04:15

இலங்கையில் பெட்ரோல் வாங்க இரவு முழுதும் காத்திருந்த ஆட்டோ டிரைவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

நம் அண்டை நாடான இலங்கை, அன்னியச் செலாவணி பற்றாக்குறை, எரிபொருள் தட்டுப்பாடு, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு உள்ளிட்ட பல நெருக்கடிகளில் சிக்கியுள்ளது. இங்கு, வாகன ஓட்டுனர்கள் நீண்ட வரிசையில் நாள் முழுதும் காத்திருந்து, பெட்ரோல், டீசல் வாங்கும் நிலை உள்ளது.

இந்நிலையில், தலைநகர் கொழும்பு அருகே பனதுரா பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்திற்கு, நேற்று முன்தினம் இரவு ஆட்டோ டிரைவர் ஒருவர் சென்றுள்ளார். நீண்ட வரிசையில் நேற்று காலை வரை காத்திருந்த அவர், திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக, ஆட்டோவிலேயே மரணம் அடைந்தார்.

இலங்கையில், ஏற்கனவே பெட்ரோல், டீசல் வாங்க காத்திருந்த சிலர், கடும் வெயிலுக்கு பலியாகியுள்ளனர். இதற்கிடையே புகாடா நகரில், நேற்று முன்தினம் இரவு சமையல் 'காஸ்' சிலிண்டர் வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்த முதியவர் ஒருவரும் மரணம் அடைந்தார்.

இந்நிலையில் இலங்கையின் பல பகுதிகளில் பெட்ரோல், டீசலுக்கு பல மணி நேரம் காத்திருக்கும் மக்கள் பொறுமையிழந்து சாலை மறியலில் ஈடுபடுகின்றனர். இந்தியாவிலிருந்து டீசல் ஏற்றிச் சென்ற கப்பல், நேற்று இலங்கையை அடைந்தது. இந்த டீசல் அடுத்த மூன்று நாட்களில் விநியோகிக்கப்படும் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.