அநீதிகளுக்கு நீதியான தீர்வை வழங்க வேண்டும்!

27.07.2025 14:12:00

வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழ் மக்களுக்கு எதிராக நடந்த இனப்படுகொலை மற்றும் அடிப்படையில்லாத அநீதிகளுக்கு சர்வதேச நீதி பொறிமுறைகள் மூலம் நீதியான தீர்வை சர்வதேச சமூகம் வழங்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுச் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் சனிக்கிழமை (26) கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றில் முன்னெடுத்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவர் இதனை தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

செம்மணியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளில் 84க்கும் மேற்பட்ட மனித எலும்புக் கூடுகள் கண்டறியப்பட்டுள்ளன. சம்பூர், மன்னர், திருக்கேதீஸ்வரம், கொக்கு தொடுவாய் போன்ற பல இடங்களில் மனித புதைகுழிகள் சோற்றப்படுவதைத் தொடர்ந்து பல தமிழர்களுடைய உடல்கள் புதைக்கப்பட்டிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அனேகமாக மீட்கப்பட்ட எலும்புக் கூடுகள் இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுடையதாகவும் இருக்கின்றன.

கொக்கு தொடுவாயில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட 51 மனித எலும்புக் கூடுகள் துப்பாக்கி சூட்டால் பாதிக்கப்பட்டவையாகவும் அடைத்து மறைக்கப்பட்டவையாகவும் மருத்துவ ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

செம்மணியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளில் மீட்கப்பட்ட எலும்புக் கூடுகள் தொகுதிகளாக சிறுவர்கள் முதல் வயோதிபர்கள் வரை பலர் கொல்லப்பட்டுள்ளார்கள்.

இந்த இனப்படுகொலை குறித்து அரசாங்கம் வெளிப்படையாக ஒப்புதல் அளிக்க மறுப்பதும், தமிழர் சமுதாயத்திற்கு பெரும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட சமுதாயம் ஏற்றுக்கொள்ளக்கூடிய சர்வதேச நீதி மற்றும் மனித உரிமை அமைப்புகளை தமிழர்கள் எதிர்பார்க்கின்றனர் என்றார்.

குறித்த போராட்டத்தில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் செயற்பாட்டாளர்கள் ஒருங்கிணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.