கினியாவில் ஆட்சியை பிடித்தது ராணுவம்

07.09.2021 05:00:00

கினியாவில் ராணுவ புரட்சியைத் தொடர்ந்து அந்நாட்டின் அதிபர் அல்பா கோன்டே சிறை வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேற்கு ஆப்ரிக்காவைச் சேர்ந்த கினியாவில் நேற்று முன்தினம் ராணுவ தளபதி மமடி டோம்போயா தலைமையில் திடீர் புரட்சி நடந்தது.இதைத் தொடர்ந்து தலைநகர் கோனக்ரியில் உள்ள அதிபர் மாளிகையை ராணுவம் முற்றுகையிட்டது.

அப்போது ராணுவத்தினருக்கும், அதிபரின் பாதுகாவலர்களுக்கும் இடையே பல மணி நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் பாதுகாவலர்கள் பின்வாங்கியதை அடுத்து ராணுவத்தினர் அதிபர் மாளிகைக்குள் நுழைந்து அல்பா கோன்டேவை கைது செய்தனர். இதைஅடுத்து மமடி டோம்போயா 'டிவி'யில் தோன்றி மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:கினியா அரசு கலைக்கப்பட்டுள்ளது. அரசியல் சாசனம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. நாட்டின் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. இனி நாட்டில் தனி மனித அரசியலுக்கு இடமளிக்க மாட்டோம். மக்களிடம் பொறுப்பு ஒப்படைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

கினியாவில் தங்கம், பாக்சைட் உள்ளிட்ட கனிம வளங்கள் உள்ளன. ஆனால் பிரான்சிடம் இருந்து விடுதலை அடைந்து 72 ஆண்டுகள் ஆகியும், ஊழல், சர்வாதிகாரம், அரசியல் குழப்பம் போன்றவற்றால், மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பாடு அடையாமல் உள்ளது.