நியூயார்க்கில் ஒரே நாளில் 12 ஆயிரம் கோவிட் இறப்புகள்
அமெரிக்காவின் நியூயார்க் மாகாண கவர்னராக கேத்தி ஹோகல் என்பவர் பொறுப்பேற்று 2 நாட்கள் ஆகும் நிலையில், முந்தைய கவர்னர் வெளியிட்டிருந்த கோவிட் இறப்புகளை விட புதிதாக 12 ஆயிரம் இறப்புகளை வெளிப்படுத்தியுள்ளார். இதனால் 43,400 ஆக இருந்த நியூயார்க் மாகாண பலி எண்ணிக்கை ஒரே நாளில் 55,400 ஆக அதிகரித்தது.
நியூயார்க் மாகாண கவர்னராக ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஆண்ட்ரூ குவோமோ ஆட்சியில் இருந்தார். இவர் மீது பல பெண்கள் பாலியல் புகார் அளித்தனர். இது பற்றி விசாரணை நடைபெற்றது. அதில் கவர்னர் ஆண்ட்ரூ பாலியல் தொல்லை கொடுத்ததற்கான ஆதாரம் உள்ளதாக, அட்டர்னி ஜெனரல் அரசுக்கு அறிக்கை அளித்தார்.
இதனையடுத்து ஜோ பைடன் அவரை ராஜினாமா செய்யச் சொன்னார். அவருக்கு பதில் ஜனநாயக கட்சியின் மூத்த உறுப்பினரான கேத்தி ஹோகல் கவர்னராக அறிவிக்கப்பட்டார். ஆகஸ்ட் 24-ம் தேதி நியூயார்க்கின் முதல் பெண் மேயராக பொறுப்பேற்றுக் கொண்டார். நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை கடைப்பிடிப்பேன் என அறிவித்தார்.
இந்நிலையில் நோய் தடுப்பு மையத்திற்கு வழங்கப்பட்ட இறப்புச் சான்றிதழ் அடிப்படையில், நியூயார்க்கில் கூடுதலாக 12 ஆயிரம் பேர் கோவிட் தாக்கி இறந்திருப்பதை வெளிப்படுத்தினார். “அவை உறுதிப்படுத்தப்பட்ட இறப்புகள். மக்கள் இரண்டையும் தெரிந்து கொள்ள வேண்டும். இத்தகவல் சி.டி.சி., உடையது. இந்த எண்களை மறைக்க வாய்ப்பில்லை” என கவர்னர் கூறினார். 12 ஆயிரம் இறப்புகள் கூடினாலும், தேசிய அளவிலான பட்டியலில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. கலிபோர்னியா, டெக்சாஸிற்கு பிறகு அதிக கோவிட் இறப்புகளை கொண்ட மூன்றாவது மாகாணமாகவே நியூயார்க் தொடர்கிறது.