அமெரிக்கா - ஈரான் கடல்வழி முற்றுகை.

16.07.2026 09:22:18

ஈரான் துறைமுகங்களுக்கு எதிராக அமெரிக்கா மீண்டும் கடல்வழி முற்றுகையை அமல்படுத்தியுள்ளதுடன், அந்நாட்டின் மீது வான்வழித் தாக்குதல்களையும் தீவிரப்படுத்தியுள்ளது. 

 

இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான இடைக்கால அமைதி ஒப்பந்தம் முறிந்து, புதிய மோதல் வெடித்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணையில் ஈரானால் அங்கீகரிக்கப்படாத கடல் வழித்தடத்தில் பயணித்ததாகக் கூறி, வணிகக் கப்பல்கள் குறிவைத்து தாக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த மோதல் வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஈரானின் சிஸ்தான்-பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள இராணுவ முகாம் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் உள்ள கிரேட்டர் துன்பீ தீவின் பாதுகாப்புத் தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளதுடன், 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இதேவேளை அமெரிக்க எச்சரிக்கையை மீறி செல்ல முயன்ற 2 வணிகக் கப்பல்கள் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

பஹ்ரைன், குவைத், ஜோர்டான் ஆகிய அண்டை வளைகுடா நாடுகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க படைகளைக் குறிவைத்து ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

அமெரிக்காவின் நடவடிக்கைக்குப் பதிலடியாக, வளைகுடா நாடுகளின் ஒட்டுமொத்த மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஏற்றுமதியை முற்றிலுமாக முடக்கப் போவதாக ஈரானின் புரட்சிகர காவல் படை எச்சரித்துள்ளது. 

பிராந்தியத்தில் இருந்து எரிபொருள் ஏற்றுமதி என்பது அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும், இல்லையெனில் யாருக்கும் இருக்காது என ஈரான் தெரிவித்துள்ளது.