இந்திய இழுவைப் படகுகளினால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள வடமராட்சி மீனவர்கள்

03.07.2021 10:27:14

 

இந்திய இழுவைப் படகுகளினால், வடமராட்சி மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாக வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் தலைவரும் யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் உப தலைவருமான வர்ணகுலசிங்கம் தெரிவித்தார்.

நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் வர்ணகுலசிங்கம் மேலும் கூறியுள்ளதாவது, “இந்திய இழுவைப் படகுகள் மீன்பிடி தடைக்காலம் என்பதால் கடந்த 2 மாதமாக இப்பகுதிகளுக்கு வரவில்லை.

ஆனால் கடந்த புதன்கிழமை இரவு , கடந்த வியாழக்கிழமை அதிகாலை வேளைகளில் கட்டைக்காடு,  சுண்டிக்குளம் மற்றும் காங்கேசன்துறை ஆகிய பகுதிகளில் நாங்கள்  தொழில் செய்யப் பயன்படுத்துகின்ற 75க்கும் மேற்பட்ட வலைகளை, இந்திய இழுவைப் படகுகள் இழுத்துச் சென்று நாசம் செய்துள்ளன.

மேலும் வல்வெட்டித்துறைப் பகுதியில் 3 முரல் வலைகள் நாசம் செய்யப்பட்டுள்ளன. இதனால் எமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதுடன் கடற்றொழிலாளர்களும் பல நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளனர்.

அதாவது நூற்றுக்கணக்கான இந்திய இழுவைப் படகுகள் எமது கரையிலிருந்து பத்து கிலோமீட்டர் தூரம் வரை வந்து வலைகளை இழுத்துச் சென்றுள்ளன. இவை பல கோடி ரூபாய் பெறுமதியாகும்.

ஆகவே இந்த விடயம் தொடர்பாக  ஜனாதிபதி, பிரதமர்,  கடற்றொழில் அமைச்சர் ஆகியோர் கடற்படைக்கு அறிவித்து, இந்திய இழுவை படகுகள் எமது எல்லைக்குள் வராமல் தடுப்பது அவசியமானதாகும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.