ஆப்கன் புதிய அதிபர் முல்லா கனி பராதர்

20.08.2021 11:47:21

ஆப்கானிஸ்தான் புதிய அதிபராக, தலிபான் தலைவர் முல்லா கனி பராதர் பொறுப்பேற்பார் என, தகவல் வெளியாகியுள்ளது.

தலிபான் அமைப்பை, மறைந்த முல்லா உமரோடு சேர்ந்து நிறுவியவர் முல்லா கனி பராதர். இவர், மேற்காசியாவின் கத்தார் நாட்டில், ஆப்கன் - அமெரிக்க பிரதிநிதிகளுடன் அமைதி பேச்சு நடத்தி வந்தார். இந்த பேச்சு தோல்வியடைந்து, தலிபான்கள் ஆப்கனை கைப்பற்றியதை அடுத்து, முல்லா கனி பராதர், காபூல் வந்தார். அவர், ஆப்கன் புதிய அதிபராக பதவி ஏற்பார் என, தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே தலிபான் அமைப்பை நிறுவியவருள் ஒருவரான முல்லா கைருல்லா கைர்கேவா கூறியதாவது:ஆப்கனில் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. தலிபானை கண்டு மக்கள் அஞ்ச வேண்டாம். அனைத்து தரப்பு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு இதர தேவைகளையும் பூர்த்தி செய்வோம். ஆப்கன் மக்கள் பாதுகாப்பாக உள்ளதாக உலகிற்கு தெரிவிக்க விரும்புகிறோம்.

உலகின் வேறு எந்த நாட்டிற்கு எதிராகவும், எத்தகைய நடவடிக்கையிலும் நாங்கள் ஈடுபட மாட்டோம். அரசில், சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களின் பங்களிப்பும் இருக்குமாறு பார்த்துக் கொள்வோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.