மாநிலங்களவை எம்.பி. வாய்ப்பு மறுப்பால் நடிகை நக்மா அதிருப்தி

30.05.2022 07:44:35

காங்கிரஸ் கட்சியில் 18 ஆண்டுகளாக இருந்தும் தனக்கு மாநிலங்களவை எம்.பி.க்கான வாய்ப்பு வழங்காதது ஏன்? என்று நடிகை நக்மா கேள்வி எழுப்பியிருக்கிறார். 

இதுகுறித்து ட்விட்டரில் அதிருப்தி பதிவு பதிவிட்டுள்ள நடிகை நக்மா, தான் காங்கிரசில் சேர்ந்த போது 2003, 2004ம் ஆண்டில் மாநிலங்களை எம்.பி. பதவி வழங்குவதாக சோனியா காந்தி உறுதி அளித்ததாக குறிப்பிட்டுள்ளார். 

அதன்பிறகு 18 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், மாநிலங்களை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட தனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று நக்மா கூறியுள்ளார். 

தற்போது மராட்டிய மாநிலத்தில் இருந்து காங்கிரஸ் வேட்பாளராக இம்ரான் என்பவர் அறிவிக்கப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள அவர், நான் அவரை விட தகுதி குறைந்தவரா? என்று ட்விட்டரில் கேள்வி எழுப்பியிருக்கிறார். 

தமிழகம், கர்நாடகா உள்பட 15 மாநிலங்களில் இருந்து 57 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிவுக்கு வருவதை அடுத்து அந்த இடங்களுக்கு அடுத்த மாதம் 10ல் தேர்தல் நடைபெற உள்ளது நினைவுகூரத்தக்கது.