"தி வாரியர் "

17.07.2022 11:37:34

ஒரு சிறிய இடைவெளிக்குப்பின், லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்துள்ள படம். இளம் டாக்டருக்கும், தாதாவுக்கும் இடையே நடக்கும் போராட்டமே கதை. மதுரை நகரையே பயமுறுத்திக் கொண்டிருக்கும் தாதா ஆதி பட்டப்பகலில், நடுரோட்டில் ஒருவரை வெட்டி சாய்க்கிறார். வெட்டப்பட்டவரின் பக்கத்தில் போகவே எல்லோரும் பயப்படுகிறார்கள். அங்குள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு புதிய டாக்டராக வரும் ராம், ரத்த வெள்ளத்தில் கிடப்பவரை ஆஸ்பத்திரியில் சேர்க்கிறார். அங்கே ஆரம்பிக்கிறது, டாக்டர் ராமுக்கும், தாதா ஆதிக்கும் இடையிலான மோதல்.

இந்த நிலையில், டாக்டர் ராமுக்கும், ரேடியோ ஜாக்கி கீர்த்தி செட்டிக்கும் காதல் மலர்கிறது. ராம் காதலிக்காக காத்திருக்கும்போது, அவரை ஆதி அடித்து உதைத்து குற்றுயிருடன் ஒரு கம்பியில் தொங்க விடுகிறார். அவருக்கு ரகசியமாக சிகிச்சை அளித்து காப்பாற்றுகிறார், சீனியர் டாக்டர் ஜெயப்பிரகாஷ். 2 வருடங்களுக்குப்பின் ராம் 'ஐ.பி.எஸ்.' படித்து முடித்த போலீஸ் அதிகாரியாக அதே மதுரைக்கு வருகிறார். தாதா ஆதியை ஒழித்துக்கட்டும் ஒரே நோக்கத்தில் புத்திசாலித்தனமாக தனது வேட்டையை தொடங்குகிறார். அவரால் ஆதியை ஒழித்துக்கட்ட முடிந்ததா, இல்லையா என்பது அடிதடியுடன் கூடிய 'கிளைமாக்ஸ்.'