யாழ். மாவட்டத்தில் இராணுவ சோதனைச் சாவடிகள் அர்த்தமற்றவை

08.11.2022 15:31:58

யாழ். மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனையையும் கடத்தலையும் தடுக்கும் நோக்குடன் பிரதான வீதிகளில் இராணுவ சோதனைச் சாவடிகள் அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருப்பது ஆச்சரியத்தை அளிப்பதாக தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் சட்டத்தரணி ந.சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இதனைத் தெரிவித்த அவர், மாவீரர் நினைவஞ்சலி வாரம் நெருங்கி வரும் சூழ்நிலையில், போதைப் பொருள் தடுப்பு என்ற பெயரால் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை நீறுபூத்த நெருப்பாக நீடிக்கும் தமிழ் மக்களின் நீண்டகால துயர நினைவுகளை உரசிப்பார்க்கும் ஓர் உளவியல் துன்புறுத்தலாக மட்டுமே அமைய முடியும் என கூறியுள்ளார்.

குறித்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“ பாரிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அன்றாட வாழ்கைக்கே அல்லாடிக் கொண்டிருக்கும் பொதுமக்கள் அனுபவிக்கும் துன்பதுயரங்கள் போதாது என்ற ரீதியிலா இந்த நடவடிக்கை என்றே கேட்கத் தோன்றுகின்றது.

அநாவசியமான கெடுபிடி
யாழ். மாவட்டத்தில் இராணுவ சோதனைச் சாவடிகள் அர்த்தமற்றவை - சட்டத்தரணி சிறிகாந்தா | Checkpoints Will Be Set Up Jaffna Road Drug Slarmy

யாழ்ப்பாணம் உட்பட தமிழ்ப் பிரதேசங்களில் இராணுவச் சோதனைச் சாவடிகள் என்பவை அநாவசியமான கெடுபிடிகளை ஏற்படுத்தியிருப்பது உளவியல் ரீதியாக அச்சுறுத்தி நிற்குமாறான வெறுப்புக்குரிய ஓர் பொறிமுறையாகவே கடந்த காலத்தில் இருந்து வந்துள்ளன என்பதே அனுபவபூர்வமான உண்மையாகும்.

இந்தப் பின்னணியில் வடக்கின் ஆளுநர் இராணுவ சோதனைச் சாவடிகளை ஏன் பரிந்துரைத்துள்ளார் என்பது புதிராக உள்ளது.

மிகவும் ஆட்சேபகரமான விடயமாக படைத்தரப்பினரால் தொடர்ந்து அணுகப்பட்டு வந்திருக்கும் மாவீரர் நினைவஞ்சலி வாரம் நெருங்கி வரும் சூழ்நிலையில், போதைப் பொருள் தடுப்பு என்ற பெயரால் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை நீறுபூத்த நெருப்பாக நீடிக்கும் தமிழ் மக்களின் நீண்டகால துயர நினைவுகளை உரசிப்பார்க்கும் ஓர் உளவியல் துன்புறுத்தலாக மட்டுமே அமைய முடியும் என்பதை தயக்கம் எதுவும் இன்றி சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

இந்த சோதனைச் சாவடிகளில் சில சிற்றெறும்புகள் வேண்டுமானால் சிக்கலாம். ஆனால் சுண்டெலிகளும் பெருச்சாளிகளும் ஒருபோதும் மாட்டிக்கொள்ளப் போவதில்லை.

கடலிலே கடற்படையிடம் போதைவஸ்து மீன்கள் சிக்குவது போல தரையில் நிகழப் போவதில்லை. இந்தச் சூழ்நிலையில் அர்த்தமற்ற இந்த திட்டத்தை கைவிடுமாறு வடமாகாண ஆளுநரை நாம் கோருகின்றோம்.

போதைப் பொருள் பிரச்சினை
யாழ். மாவட்டத்தில் இராணுவ சோதனைச் சாவடிகள் அர்த்தமற்றவை - சட்டத்தரணி சிறிகாந்தா | Checkpoints Will Be Set Up Jaffna Road Drug Slarmy

அதே வேளையில் யாழ். மாவட்டத்தில் விஸ்வரூபம் எடுக்க முனையும் போதைப் பொருள் பிரச்சினைக்கு முடிவு கட்ட அறிவார்ந்த ரீதியில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் அவசரமாக எடுக்கப்படுவது அவசியமானது என்றும் நாம் தெரிவிக்க விரும்புகின்றோம்.

சமூகத்தின் சகல தரப்பினரையும் போதைப் பொருட்களுக்கு எதிரான போராட்டம் ஒன்றில் உத்வேகத்தோடு ஈடுபடுத்தும் திட்டமொன்று தீட்டப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது வேண்டுகோள் ஆகும்.

சமூகத்துறை, நிர்வாகத்துறை, காவல்துறை உட்பட படைத்தரப்பு மற்றும் சட்டத்துறை, நீதித்துறையோடு சமயத்துறையையும் உள்ளடக்கிய ஓர் பரந்த திட்டம் வகுக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டால் மட்டுமே சமூகத்தின் சகல பிரிவினரின் பூரண ஒத்துழைப்பை பெற்று இப்போராட்டத்தில் வெற்றிபெற முடியும்.

போதைப் பொருள் பாவனையில் சிக்கியுள்ள இளைய சந்ததியினரை மீட்டெடுப்பதில் உளவியல் ரீதியான செயற்பாடுகளும் பொருளாதார ஊக்குவிப்புடன் கூடிய கல்வி மற்றும் தொழிற்பயிற்சிகளும் அவசியமானவை என்பதையும் நாம் அழுத்திக் கூற விரும்புகின்றோம்.

இந்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு உதவுவதிலும் ஊக்கம் அளிப்பதிலும் சமூக செயற்பாட்டாளர்களின் பங்களிப்பு மிகவும் அத்தியாவசியமானது என்பதை சொல்ல வேண்டியதில்லை.

இறுதியாக போதைப்பொருள் வியாபாரத்தையும் பாவனையையும் முறியடிப்பதில் கசப்பானதோர் உண்மையை தரிசித்தே தீரவேண்டும்.

யாழ். மாவட்டத்தில் இராணுவ சோதனைச் சாவடிகள் அர்த்தமற்றவை - சட்டத்தரணி சிறிகாந்தா | Checkpoints Will Be Set Up Jaffna Road Drug Slarmy

அதிகாரம் மிக்க பலரின் ஆதரவோடும் அனுசரணையோடும் தான் யாழ்ப்பாணப் பிராந்தியத்தில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கௌரவத்தோடு வலம் வந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதே அந்த உண்மை.

அது மட்டுமன்றி இவர்களின் தென்னிலங்கை தொடர்புகள் ஊடாகவே யாழ்ப்பாணம் இன்று மெல்ல மெல்ல நாசமாகிக் கொண்டிருக்கின்றது.

இந்த ஒட்டுமொத்த வலைப்பின்னலும் கண்டறியப்பட்டு ஏதோ ஒரு விதத்திலாவது சம்பந்தப்பட்டோர் மீது சட்டம் பாயாதவரையில் பிரச்சினைக்கு முடிவு கட்டுவது என்பது பெரும் போராட்டமாகவே தொடரும்” என்றுள்ளது.