மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்.
தமிழ்நாட்டின் மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 06.10.2026 அன்று காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. இதனையொட்டி, தேர்தல் விதிமுறைகளின்படி அமைதியான முறையிலும் நேர்மையாகவும் வாக்குப்பதிவு நடைபெறுவதை உறுதிசெய்ய பல்வேறு முக்கியக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 126-ன் கீழ், 04.10.2026 அன்று மாலை 6.00 மணி முதல் வாக்குப்பதிவு முடிவடையும் வரையில் தேர்தல் பிரச்சாரங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள், ஒலிபெருக்கி பிரச்சாரங்கள் மற்றும் தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்கள் வாயிலான பிரச்சாரங்கள் அனைத்தும் முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளன.
மேலும், தொகுதியில் வாக்காளர்களாக இல்லாத வெளிநபர்கள் அனைவரும் 04.10.2026 மாலை 6.00 மணிக்கு மேல் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும். வாக்குப்பதிவு முடியும் வரை மதுக்கடைகள் அடைக்கப்படும். இந்த விதிமுறைகளை மீறுவோருக்கு அபராதத்துடன் சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.