திராவிடத்தில் இன்னொரு கட்சியா?
மதிமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்ட மூத்த நிர்வாகி மல்லை சத்யா, 2016 சட்டமன்ற தேர்தலில் அமைக்கப்பட்ட மக்கள் நல கூட்டணி குறித்துப் பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார். இந்த கூட்டணி உருவானதன் பின்னணியில் பல ரகசியங்கள் உள்ளன என்றும், அவற்றை இப்போதைக்கு வெளியிட முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தான் புதிய அரசியல் கட்சி ஆரம்பிக்க இருப்பதாகவும் கூறியுள்ளார்.
துரை வைகோவுடனான கருத்து வேறுபாட்டால் கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக கூறி, மல்லை சத்யாவை வைகோ நீக்கினார். இந்நிலையில், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த மல்லை சத்யா கூறியதாவது:
வரும் நவம்பர் 20 அன்று சென்னையில் புதிய கட்சியை தொடங்க உள்ளதாகவும், அதன் பெயரை முடிவு செய்ய 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்தார்.
"திராவிட இயக்கக் கருத்தியலில் இருந்து பின்வாங்க மாட்டேன்" என்றும் அவர் உறுதி அளித்தார்.
மக்கள் நலக் கூட்டணி குறித்த அவரது மறைமுகமான பேச்சு, தமிழக அரசியல் வட்டாரத்தில் மீண்டும் விவாதங்களை எழுப்பியுள்ளது.