ரஷ்யாவில் 24 மணி நேரத்தில் 40 ஆயிரம் பேருக்கு கொரோனா

28.10.2021 15:22:00

 ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 40,096 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,159 பேர் பலியாகி உள்ளனர்.

ரஷ்யாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்றும், பலியும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 40,096 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 1,159 பேர் பலியாகி உள்ளனர். ரஷ்யாவில் 85 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸுக்கு எதிராக முதல் முதலாகத் தடுப்பூசியை அறிமுகம் செய்த நாடு ரஷ்யா. ஆனால், ரஷ்யாவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு வெளிநாடுகளில் மட்டுமல்லாது உள்நாட்டிலும் தட்டுப்பாடு நிலவுகிறது. ஸ்புட்னிக் தடுப்பூசியின் முதல் தவணையைப் போட்டுக்கொண்ட சிலர், இரண்டாவது தவணை தடுப்பூசி போட முடியாமல் காத்திருக்கின்றனர்.

பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்தபோதிலும் ரஷ்யாவில் கொரோனா பரவல் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் முதல்கட்டமாக அடுத்த 11 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அவசிய சேவைகள் தவிர மற்ற அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. மக்கள் அவசியமின்றி வெளியே நடமாடவும், பயணம் செய்யவும், தடை விதிக்கப்பட்டுள்ளது