கோயம்பேடில் காய்கறி விலை உயர்வு

02.12.2021 06:16:28

தக்காளி, கத்தரிக்காயை தொடர்ந்து அவரைக்காய் விலையும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.மழை காரணமாக, தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களிலும், காய்கறிகள் விளைச்சல் குறைந்துள்ளது.

இதனால், பலவகை காய்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. சுபமுகூர்த்தம் உள்ளிட்ட விசேஷ நாட்களில் காய்கறிகள் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. கடந்த வாரம் தக்காளிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால், கிலோ 150 முதல் 180 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.

மஹாராஷ் டிரா, சட்டீஸ்கர் மாநிலங்களில் இருந்து தக்காளி விற்பனைக்கு வருவதால், விலை குறைந்து உள்ளது.தற்போது சென்னை கோயம்பேடில், மொத்த விலையில் கிலோ தக்காளி 50 முதல் 55 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.தொடர்ந்து கத்தரிக்காயும் கிலோ 90 முதல் 100 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது.

விளைச்சல் குறைவு காரணமாக அவரைக்காய் கிலோ 90 முதல் 100 ரூபாய்க்கும், வெண்டைக்காய் 80 முதல் 90 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. கோயம்பேடில் கழித்து கட்டப்பட்ட இரண்டாம், மூன்றாம் தர காய்கறிகளும் 100 ரூபாய்க்கு குறையாமல் விற்கப்படுகிறது. உணவில் அதிகம் பயன்படுத்தப்படும் காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்து உள்ளனர்.