தொடர்ந்தும் மீட்கப்படும் மனித எச்சங்கள்
யாழ்ப்பாணம்-புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை அருகே மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்றையதினம் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஊர்காவற்துறை மாவட்ட நீதிபதி நீதவான் நளினி சுபாகரன், சட்ட வைத்திய அதிகாரி செ.பிரணவன் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள் முன்னிலையில் குறித்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
புங்குடுதீவு 10 ஆம் வட்டாரத்தில் அரசினர் வைத்தியசாலையை அண்மித்த பகுதியிலுள்ள தென்பெருந்துறை சதானந்தசிவன் ஆலயத்தின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் வேளையில், ஆலய சூழலில் கிடங்கொன்றினை வெட்டிய போது , மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அண்மையில் வெளிவந்தன.
அதனைத் தொடர்ந்தே கிடங்கு வெட்டும் பணிகளை இடைநிறுத்தப்பட்டு அது தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், அவ்விடத்தினை தமது கட்டுப்பாட்டுக்குள் எடுத்த நிலையில் அவ்விடத்தில் அகழ்வு பணிகளை முன்னெடுக்க, ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் அனுமதி கோரி விண்ணப்பம் செய்தனர்.
அதன் அடிப்படையில் இன்றையதினம் நீதிமன்றத்தின் அனுமதியுடன் அவ்விடத்தில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.