
₹.. தூக்கி எறிந்துவிடுமா திமுக?
தமிழக அரசின் ஆவணத்தில் இப்போது ₹ அடையாளத்தை நீக்கப்பட்டு அதற்கு பதிலாக ரூ என்று அடையாளம் பயன்படுத்தப்பட உள்ள நிலையில் ₹ என்ற சின்னத்தில் இருக்கும் கருணாநிதி நினைவு நாணயங்களையெல்லாம் வீசி எறிந்து விடுமா? என்று பா.ம.க., தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தொடர்பான முன்னோட்டத்தில் ரூபாய் என்பதன் அடையாளமான ₹ என்ற குறியீட்டை நீக்கி விட்டு, அதற்கு பதிலாக ரூ என்ற குறியீட்டை வைத்து, அதை ஏதோ புரட்சி போன்று தி.மு.க., அரசு விளம்பரம் செய்து கொண்டிருக்கிறது. தி.மு.க., அரசின் செயலற்ற தன்மையால் ஏற்படும் வேதனைகளைத் தாங்க முடியாமல் மக்கள் குமுறிக் கொண்டிருக்கும் நிலையில், அதை திசை திருப்பும் நோக்குடன் இத்தகைய நாடகங்களை தி.மு.க., அரசு அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது.
எதையாவது செய்து மக்களை பதற்றத்திலேயே வைத்திருக்க வேண்டும். எவரும் அரசை எதிர்த்து வினா எழுப்பாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற பரபரப்பில் பழைய வரலாறுகளை தி.மு.க., மறந்து விடுகிறது. ₹ அடையாளம் நேற்றோ, அதற்கு முன்நாளோ வெளியிடப்பட்டது அல்ல. 15 ஆண்டுகளுக்கு முன் 2010ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி தி.மு.க., அங்கம் வகித்த மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் தான் வெளியிடப்பட்டது. அப்போது அதை தி.மு.க., ஆதரித்தது.