
IMF மீளாய்வுகள் 2027 நடுப்பகுதியில் நிறைவடையும்!
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான அனைத்து மீளாய்வுகளையும் 2027 ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்குள் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்தக் கூட்டத் தொடருக்கு இணையாக அமெரிக்கா சென்றுள்ள மத்திய வங்கி ஆளுநர், 'அத தெரண' உடனான விசேட நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு இதனைக் குறிப்பிட்டார்.
இந்திவரி அமுவத்த - "நீங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள்? இந்த சந்திப்பு எமக்கு ஏன் இவ்வளவு முக்கியமானது?"
மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க - "வொஷிங்டனில் நடைபெறும் இந்த சந்திப்புகள் எமக்கு மிகவும் முக்கியமானவை. ஏனெனில், நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களை சந்திப்பதற்கான வாய்ப்பு எமக்குக் கிடைக்கிறது. அதேபோல, இருதரப்பு மற்றும் பல்தரப்பு ரீதியாக ஏனைய பிரதிநிதிகளையும் முதலீட்டாளர்களையும் சந்திப்பதற்கான வாய்ப்பும் கிடைக்கிறது."
இந்திவரி அமுவத்த - "இலங்கை சமீபத்தில் 5ஆவது மீளாய்வை நிறைவு செய்தது. அதில் சில பரிந்துரைகள் குறிப்பிடப்பட்டிருந்தன. சர்வதேச நாணய நிதியம், இலங்கை அடைந்துள்ள முன்னேற்றங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் தொடர்பில் பாராட்டியுள்ள போதிலும், ஊழல் முகாமைத்துவம், அரச நிறுவனங்களின் சீர்திருத்தம் மற்றும் நீண்டகால வருவாய் ஈட்டல் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ளது. இது குறித்த உங்கள் கவனம் என்ன?"
மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க - "கடந்த வாரம் இலங்கை ஐந்தாவது மீளாய்வை நிறைவுசெய்தது. அந்த மீளாய்வு அறிக்கை அடுத்த டிசம்பர் மாதம் பணிப்பாளர் சபையில் சமர்ப்பிக்கப்படும். அதில் சில முக்கியமான விடயங்கள் உள்ளன. மிக முக்கியமானது, 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவது. அது தவிர, அரச நிறுவனங்களின் சீர்திருத்தம் போன்ற மேலும் பல முக்கிய சீர்திருத்தங்கள் உள்ளன. செலவினங்களை ஈடுசெய்யும் வகையிலான விலையிடல், வருமானத்தை அடிப்படையாகக் கொண்ட நிதி உறுதிப்பாடு என்பன அவற்றில் சில. மேலும் இரண்டு விடயங்கள் உள்ளன. பொருளாதார வீழ்ச்சியால் அதிகம் பாதிக்கப்பட்ட வறிய மக்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் ஆதரவளிப்பது இலங்கை மக்களுக்கு மிகவும் முக்கியமானது. மற்றையது, ஊழல் மற்றும் அரச நிர்வாகப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது. ஐந்தாவது மீளாய்வு என்பது இந்தப் பயணத்தின் அரைவாசி தூரம். நாம் 8 மீளாய்வுகளை பூர்த்தி செய்ய வேண்டும். அதனை 2027ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் நிறைவுசெய்ய எதிர்பார்க்கிறோம்."
இந்திவரி அமுவத்த - "நான் இந்திவரி, இலங்கையின் அத தெரண செய்திச் சேவையிலிருந்து. இலங்கை போன்ற வளர்ந்துவரும் சந்தைகள் மீதான முதலீட்டாளர் நம்பிக்கையை சர்வதேச நாணய நிதியம் எவ்வாறு மதிப்பிடுகிறது என்பது குறித்து எனக்கு ஒரு கேள்வி உள்ளது. அதிக கடன் செலவுகள் மற்றும் வரையறுக்கப்பட்ட சந்தை அணுகல் ஆகியவற்றின் பின்னணியில், நிதி ஸ்திரத்தன்மைக்கு முக்கியமான காரணிகளாக நீங்கள் கருதுபவை எவை? அத்துடன், இந்த நாடுகள் கட்டமைப்பு ரீதியான சீர்திருத்தங்களைச் செயல்படுத்தும்போது, ஸ்திரத்தன்மைக்கு ஏற்படக்கூடிய அபாயங்களாக நீங்கள் எவற்றைப் பார்க்கிறீர்கள்?"
IMF நிதி ஆலோசகரும் பணிப்பாளருமான டோபியாஸ் ஏட்ரியன் - "நீங்கள் சுட்டிக்காட்டியது போல், இலங்கை கடன் மறுசீரமைப்பு மூலம் மீட்சியடைந்து, நம்பிக்கையை கட்டியெழுப்பி வளர்ச்சிப் பாதையில் நுழைந்துள்ளது. சந்தை அணுகலைக் கொண்ட குறைந்த வருமானம் பெறும் நாடுகளைப் பொறுத்தவரை, உலகளாவிய சந்தைகளில் நிதி நிலைமைகள் ஒப்பீட்டளவில் சாதகமாக இருப்பதாகத் தெரிகிறது. பணப்புழக்கம் மற்றும் சந்தையை அணுகும் திறன் இந்த ஆண்டில் உயர் மட்டத்தில் இருந்ததாகவும் கூறலாம்."
IMF நாணயம் மற்றும் மூலதனச் சந்தைகள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ஜேசன் வூ - "இலங்கையின் பொருளாதாரச் செயல்திறன் மேம்பட்டுள்ளது என்பதை என்னாலும் கூற முடியும். நீங்கள் கேட்டது போல், வளர்ந்துவரும் சந்தைகள் குறித்து பொதுவாகக் கூறினால், டொலரின் பெறுமதி ஒப்பீட்டளவில் பலவீனமடைந்திருப்பது வெளிப்புற அழுத்தங்களைக் குறைத்துள்ளது. இதன் மூலம் நன்மைகளைப் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. வளர்ந்துவரும் சந்தை நாடுகள் அடிப்படைப் பொருளாதார விதிகளைத் தொடர்ந்து மேம்படுத்த வேண்டும். நடப்புக் கணக்கு, வெளிநாட்டு கையிருப்புக்கள் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை உருவாக்குவதும் இதில் அடங்கும். குறிப்பாக, சந்தைக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதன் மூலம், வளர்ந்துவரும் சந்தைகள் உள்நாட்டிலேயே மூலதன நிதியைத் திரட்டிக்கொள்ள முடியும்."