அனைவரும் ஒன்றிணைந்து ஒரேயொரு தேசிய நோக்கத்துக்காக உழைக்க வேண்டும்!

20.02.2024 09:35:31

சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரேயொரு தேசிய நோக்கத்துக்காக உழைக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

 

மாத்தளை மாவட்ட பெண்கள் மாநாட்டில் உரையாற்றும் போதே ரில்வின் சில்வா இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” எமது நாட்டின் நிதிக் கொள்கையைத் தீர்மானிப்பது சர்வதேச நாணய நிதியமாகும். எமது நாட்டில் எமக்கு எந்த உரிமையும் இல்லை. நாட்டு மக்களுக்கு காணி உறுதிகளை வழங்குவதாகக் கூறி தம்புள்ளைக்கு மக்களை வரவழைக்கின்றனர்.

ஆனால் அரசாங்கத்துக்குச் சொந்தமாக பால் பண்ணைகளை இந்தியாவின் அமூல் கம்பெனிக்கு விற்கிறார்கள்.
அம்பாந்தோட்டை துறைமுகம், கொழும்பு துறைமுகத்தின் முனையங்கள், எண்ணெய்க் குதங்கள் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. எனவே நாடு சுதந்திரமானதா? இந்த நிலைமைக்கு எதிராக உண்மையான சுதந்திரத்தை பெற்றுக்கொள்ள புதிய பாணியிலான சுதந்திரப் போராட்டமொன்று எமக்குத் தேவை.
அதேபோன்று சிங்கள, தமிழ், முஸ்லிமாக உள்ள நாம் அனைவரும் ஒரு தேசிய நோக்கத்துக்காக உழைக்க வேண்டும்.

அதிகாரத்துக்காக இதுவரை இருந்த ஆட்சியாளர்கள் மக்களை மத ரீதியாக, இனத்துவ ரீதியாக பிரித்தாண்ட யுகத்துக்கு முற்றுப்புள்ளி வைப்போம். முன்னேற்றமடைந்த கலாசார சமூகமொன்றை கொண்ட மனிதர்களை கட்டியெழுப்ப வேண்டியது அவசியமாகும்” இவ்வாறு ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.