ரிபார்ம் யூகே கட்சி செயற்பாட்டாளர் ஆடம் மிதுலா இடைநீக்கம்!

25.02.2026 11:49:43

மத்திய மான்செஸ்டரின் கோர்டன் மற்றும் டென்டன் (Gorton and Denton) இடைத்தேர்தலில் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த அக்கட்சியின் இடைக்கால தேர்தல் மேலாளர் ஆடம் மிதுலா (Adam Mitula), கடந்த காலங்களில் தனது சமூக வலைதளப் பக்கங்களில் இனவெறி மற்றும் யூதர்களுக்கு எதிரான கருத்துகளைப் பதிவிட்டதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பாக, கறுப்பின மக்களை இழிவுபடுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்தியது மற்றும் யூதப் பெண்களைப் பற்றி அவதூறாகப் பேசியது தொடர்பான ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் மிதுலாவாழ் வெளியிடப்பட்ட இனவெறி கருத்துக்கள் தொடர்பில் ஹோப் நாட் ஹேட்’ (Hope Not Hate) என்ற இனவெறி எதிர்ப்பு அமைப்பு, அவரது ‘X’ கணக்கிலிருந்து ஆதாரங்களைத் திரட்டி வெளியிட்டுள்ளது.

இதனால் ஏற்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்து அவர் தனது கணக்கை நீக்கியுள்ளார்.

இதேவேளை, இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்துப் பல நாட்களாக மௌனம் காத்து வந்த ரிபார்ம் யூகே கட்சி, தற்போது அவரை இடைநீக்கம் செய்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த மிதுலா, தான் இடைநீக்கம் செய்யப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளார்.

நாளையதினம் நடைபெறவுள்ள கோர்டன் மற்றும் டென்டன் இடைத்தேர்தலுக்கு முன்னதாக இந்த விவகாரம் வெடித்துள்ளதால் இத்தகைய இனவெறி சர்ச்சைகள் அக்கட்சியின் தேர்தல் வாய்ப்புகளைப் பாதிக்கக்கூடும் எனக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.