‘கில்லி’ ரீ-ரிலீஸ் மாபெரும் வெற்றி
விஜய் நடிப்பில் உருவான ‘கில்லி’ திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர், விஜய்யை சந்தித்து மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
தரணி இயக்கத்தில், விஜய் நடிப்பில் 2004ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி வெளியான படம் ‘கில்லி’. விஜய்யின் கரியரில் முக்கியமான படமாக அமைந்த இதில் த்ரிஷா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். வித்யாசாகர் இசையமைத்திருந்தார்.
இப்படம், 20 ஆண்டுகளுக்குப் பிறகு 4கே டிஜிட்டல் தரத்தில் மெருகூட்டப்பட்டு கடந்த 20ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தை, சக்திவேல் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
படம் வெளியான 2 நாட்களில் ரூ.12 கோடியை வசூலித்துள்ளதாக வெளியான தகவல் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர் சக்திவேலன் நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது அவர், “அரசியலுக்கும், மக்களுக்கும் நீங்கள் நிறைய நேரத்தை செலவிடுங்கள். ஆனால், வருடத்திற்கு ஒரு படமாவது பண்ணுங்கள். வியாபாரம் என்பதை தாண்டி, திரையரங்குகளில் கூஸ்பம்ஸ் தருணமாக உள்ளது” என்றார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.