இஸ்ரேலுக்கு உதவி செய்துவரும் கம்பனிகளின் பொருட்களை முஸ்லிம்கள் புறக்கணிக்க வேண்டும்

09.05.2024 07:15:00

பலஸ்தீன் மக்களைக் கொலை செய்ய இஸ்ரேலுக்கு உதவி செய்துவரும் நாடுகளின் கம்பனிகள் இலங்கையிலும் இயங்கி வருகின்றன. அந்த நிறுவனங்களின்  பொருட்களை இலங்கை முஸ்லிம்கள் புறக்கணிக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் எச்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (8) இடம்பெற்ற இராஜதந்திர சிறப்புரிமைச் சட்டத்தின் கீழ் கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

இஸ்ரேல் பிரதமர் யதன்யாஹு என்ற கொடுங்கோலனின் தலைமையிலான இஸ்ரேலிய நவநாஜிகள் கூட்டம் பலஸ்தீன் மக்களைக் கொன்று குவித்து வரும் நிலையில், காஸா மக்கள் அகதிகளாகத் தஞ்சம் புகுந்துவரும் ரபா நகரிலும் தாக்குதல் நடத்த இஸ்ரேல் இராணுவத்தை நகர்த்திக்கொண்டிருக்கிறது. இதன் காரணமாக  அந்த மக்களுக்குப் பாதுகாப்பு வழங்க முடியாத நிலையில் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை இருந்துகொண்டிருக்கிறது. 

இஸ்ரேல் ராணுவத்தின் கொடுங்கோல் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தாமல் எகிப்து நாட்டு ஜனாதிபதியும் நாடகம் ஆடிக்கொண்டிருக்கிறது. ரபாவில் தஞ்சம் புகுந்துள்ள பலஸ்தீன் மக்களைக் கொன்று குவிப்பதற்காக, ரபா எல்லைக்குச் செல்வதற்கான வாயிலை எகிப்து திறந்து கொடுத்திருக்கிறது.

பலஸ்தீன் மக்களுக்கு எதிராக யுத்தம் செய்ய இஸ்ரேலுக்கு உதவுகின்ற நாடுகளின் வியாபார நிறுவனங்கள் இலங்கையில் இயங்கி வருகின்றன. குறிப்பாக இஸ்ரேல் நிறுவனங்களான கே.எப்.சி, மெக்டொனல், பீஸா ஹட் போன்ற நிறுவனங்களின் உற்பத்திகளை இலங்கை முஸ்லிம்கள் புறக்கணிக்க வேண்டும்.. இந்த உணவு நிறுவனங்களின் மூலம் கிடைக்கும் பணம் காஸாவில் இருக்கும் முஸ்லிம்களை கொலை செய்ய உதவியாக இருந்து வருகிறது. 

யதன்யாஹுவின் படுகொலையைக் கண்டித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அவரை கைதுசெய்ய உத்தரவிட நடவடிக்கை எடுத்தபோது அதனை அமெரிக்க தடுத்து நிறுத்தியுள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு யதன்யாஹுவை கைது செய்ய முதுகெலும்பு இல்லாமல் இருக்கிறது என்றார்.