இஸ்ரேல் போட்ட ஸ்கெட்ச்! ரகசிய பாதையில் எஸ்கேப்?
இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நடந்து வரும் நிலையில் ஹெஸ்புல்லாவின் அடுத்த தலைவரை குறி வைத்து இஸ்ரேல் குண்டுமழை பொழிந்துள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக போர் நடந்து வரும் நிலையில், ஹமாஸ்க்கு ஆதரவாக ஹெஸ்புல்லா அமைப்பு லெபனானில் இருந்து இஸ்ரேலை தாக்கியது. இதனால் இஸ்ரேல் பதிலடியாக லெபனானில் ஹெஸ்புல்லா அமைப்பின் ஆக்கிரமிப்பு பகுதிகளை தாக்கத் தொடங்கியுள்ளது.
சமீபத்தில் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹெஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா (hassan nasrallah) கொல்லப்பட்டார். தொடர்ந்து அடுத்த ஹெஸ்புல்லா தலைவராக மாற வாய்ப்புள்ள நபர்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தி வருகிறது. அவ்வாறாக சிரியாவில் இருந்த ஹசன் நஸ்ரல்லாவின் மருமகனை சமீபத்தில் இஸ்ரேல் படைகள் கொன்றன.
இந்நிலையில் பெய்ரூட்டில் ஹெஸ்புல்லா அமைப்பின் தலைமையகம் உள்ள தாகியே பகுதியில் குண்டுமழை பொழிந்து தாக்கியுள்ளது இஸ்ரேல். ஹெஸ்புல்லாவின் அடுத்த தலைவராக மாற வாய்ப்புள்ள ஹாசிம் சஃபிதின் (Hashem Safieddine) தாக்குதல் நடந்த இடத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அப்பகுதியில் வெடிக்குண்டு தாக்குதலில் தப்பிக்கும் பங்கர் உள்ளதால் அது வழியாக அவர் தப்பியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. ஹாசிம் சஃபிதின் என்னவானார் என விரைவில் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.