நல்லாட்சி மீட்டெடுத்த நாட்டை நாசமாக்கியுள்ளார் கோட்டா - சஜித் பிரேமதாஸ

10.10.2021 05:21:10

சர்வதேசத்தின் பிடியிலிருந்தும் பொருளாதார வீழ்ச்சியிலிருந்தும் எமது நல்லாட்சி அரசு மீட்டெடுத்த நாட்டை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாசமாக்கியுள்ளார். அவர் பதவிக்கு வந்து இரண்டு வருடங்கள் நிறைவடைவதற்கு முன்னர் இந்தச் சாதனையைப் படைத்துள்ளார்.

என்று எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசு நாட்டை இருளை நோக்கிக் கொண்டு செல்கின்றதே அன்றி, வெளிச்சத்தை நோக்கிக் கொண்டு செல்லும் அடையாளத்தைக் காண முடியவில்லை.

சௌபாக்கியத்துக்குப் பதிலாக அரசு அசௌபாக்கியத்தை மாத்திரமே நாட்டுக்கு மீதம் வைத்துள்ளது.

ஒரு புறம் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தொழில் வாய்ப்புகள் இன்றி இளைஞர், யுவதிகள் கஷ்டத்தில் உள்ளனர். மறுபுறம் உழவர்கள் செய்வதறியாத நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

முழு நாட்டு மக்களும் வாழ்க்கை தொடர்பான பாரதூரமான பல நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளனர். இந்த நிலைமையை மாற்றக் கூடிய ஒரே சக்தி ஐக்கிய மக்கள் சக்தி மாத்திரமே – என்றார்.