செம்மணி மனித புதைகுழி.

09.07.2025 14:00:00

செம்மணி மனித புதைகுழி குறித்து பிரிட்டன் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாக பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டேவிட் லமி தெரிவித்துள்ளார். வெளிவிவகார குழுவின் கூட்டத்தில் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

செம்மணியில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித புதைகுழிகள் குறித்து நான் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன். ஆம் நாங்கள் இலங்கை அரசாங்கத்துடன் இந்த விடயம் குறித்து நேரடிப்பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளோம்.கடந்த மாதம் குறித்து பேசினோம்.

இலங்கையின் பல பகுதிகளில் காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்களுடன் நாங்கள் நெருக்கமான தொடர்பினை பேணி வருகின்றோம்.அவர்களின் குரல்கள் செவிமடுக்கப்படுவதை உறுதி செய்வதற்காக அரசசார்பற்ற அமைப்புகள் உட்பட ஏனைய தரப்புகளுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றோம்.

எங்களால் தொழில்நுட்ப உதவிகளை வழங்க முடியுமா என்பது குறித்து ஆராய்வதற்கு நான் தயார். மனித புதைகுழி விடயத்தில் திறன் தொடர்பான பிரச்சினைகள் உள்ளமை குறித்த புரிந்துணர்வு காணப்படுகின்றது.

இலங்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தொடர்பான ரோம் உடன்படிக்கையில் கைச்சாத்திடவில்லை இதன் காரணமாக இழைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கான நியாயாதிக்கம் சர்வதேச நீதிமன்றத்திற்கு இல்லை.