'பொய்யான செய்தியாக இருக்கக் கூடாதா: மனசு வலிக்கிறது' .

27.06.2026 16:17:18

தமிழ் திரையுலகின் 'திரைக்கதை மன்னன்' என்று போற்றப்படும் பிரபல இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜ் (வயது 73), இன்று (ஜூன் 27, 2026) காலை சென்னையில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவரது மறைவுச் செய்தி, அவரது குருநாதர் இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவு தந்த சுவடு மாறுவதற்குள், ஒட்டுமொத்த திரையுலகையும் ரசிகர்களையும் மீளாத் துயரிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

 

பாக்யராஜின் மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் சீமான் நேரில் அஞ்சலி செலுத்திவிட்டு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''இந்தியத் துணைக்கண்டத்திலே அவரைப் போன்ற திரைக்கதை ஆசிரியர் யாருமில்லை என்ற புகழைப் பெற்றவர். திரைக்கதையில் அவர் ஒரு பல்கலைக்கழகம். அவரை படிக்காத மாணவர்களே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அவர் எடுத்த படங்களில் ஒவ்வொரு கதையும் திரையில் அவர் சொன்ன திரைக்கதை முறையும் பெரிய வரவேற்பு பெற்று, பார்த்தவர்கள் எல்லாம் வியப்பில் ஆழ்த்திய காவியங்களைப் படைத்தவர்.

இயக்குநர் பாரதிராஜாவின் முதல் மாணவனாக வந்து தொடர்ந்து வெற்றிகளை கொடுத்து பெரும் உயரத்தைத் தொட்ட பெருமகன் பாக்யராஜ். இந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது. சிலர் பொய்யாகக் கூட செய்தி பரப்புவார்கள் அப்படி இருந்திருக்கக் கூடாதா என்று மனம் நினைத்தது. அண்மையில் பாரதிராஜாவின் இறுதி பயணத்தில் என் கூடவே அருகில் இருந்து குறிப்பாக தேனி வரைக்கும் வந்து இறுதி அடக்கம் நிகழ்வு வரை பங்கேற்று இருந்தார். மிகுந்த வருத்தத்தை தருகிறது. தம்பி சாந்தனு ஜெயிக்க வேண்டும். அதைப் பார்க்காமலேயே போய்விட்டார் என அழுதது மனசு மிகுந்த வலியைத் தருகிறது. பழகுவதற்கு எளிய மனிதனை இழந்திருப்பது ஈடு செய்ய முடியாத பேரிழப்பு'' என்றார்.