கோட்டாபய ஆணைக்குழு கலைக்கப்பட்டது..!

28.07.2022 15:58:44

கல்விக்கான அதிபர் ஆணைக்குழு உடனடியாக நடைமுறைக்கு வரும்வகையில் கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்விக்கான அதிபர் ஆணைக்குழுவின் செயலாளர் கே. ஆர். பத்மப்பிரிய இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

 

கோட்டாபய ராஜபக்சவினால் ஸ்தாபிக்கப்பட்ட ஆணைக்குழு

இலங்கையில் கல்வி மேம்பாடு, விரிவாக்கம் மற்றும் நவீன மயப்படுத்தலுக்கான பரிந்துரைகளுக்கென முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவினால் கல்விக்கான அதிபர் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டது.

அரசியலமைப்பின் 33 ஆவது உறுப்பரைக்கமைவாக அதிபருக்குரிய அதிகாரத்தின் படி, 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி, விசேட வர்தமானி அறிவித்தல் மூலம் இலங்கையில் கல்வி நடவடிக்கைகள் பற்றிய அதிபர் ஆணைக்குழுவை ஸ்தாபித்திருந்தார் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச.

இதேவேளை, ஆரம்பக் கல்வி, இடைநிலைக் கல்வி, உயர் கல்வி மற்றும் மூன்றாம் நிலைக் கல்வியில் மேற்கொள்ளப்பட வேண்டிய விரிவாக்கல் நடவடிக்கைகள் மற்றும் கல்வியை நவீனமயப்படுத்துவதற்குத் தேவையான பரிந்துரைகளை ஜனாதிபதிக்கு வழங்குவதும், கல்வி முன்னேற்றம் பற்றி அறிக்கைகளை வழங்குவதும் இந்த ஆணைக்குழுவின் பிரதான செயற்பாடுகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில், தற்போது நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை அடுத்து இந்த ஆணைக்குழு கலைக்கப்பட்டுள்ளதாக கல்விக்கான அதிபர் ஆணைக்குழுவின் செயலாளர் மேலும் குறப்பிட்டுள்ளார்.