சூடானில் ராணுவ புரட்சி
சூடானில் ராணுவம் திடீர் புரட்சி நடத்தி ஆட்சியை கைப்பற்றியுள்ளது. பிரதமர் உள்ளிட்ட பல அமைச்சர்கள் கைது செய்யப்பட்டுள்ளதால் வன்முறை வெடிக்கும் சூழல் உருவாகி உள்ளது.
வடக்கு ஆப்ரிக்காவைச் சேர்ந்த சூடானில் இரு ஆண்டுகளுக்கு முன் சர்வாதிகார ஆட்சி நடத்திய உமர் அல் பஷீர் நீக்கப்பட்டார். இதையடுத்து நாடு மீண்டும் ஜனநாயகப் பாதைக்கு திரும்ப, ஜெனரல் அப்துல் படா புர்ஹன் தலைமையில் உயர்மட்ட ஆட்சிக் குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று திடீரென ராணுவம் புரட்சி நடத்தி ஆட்சியைக் கைப்பற்றியது.
சூடான் இடைக்கால பிரதமர் அப்துல்லா ஹம்டோக், தொழில் துறை அமைச்சர் அல் - ஷேக், தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஹம்சா பலொல் உள்ளிட்ட பல அமைச்சர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கவர்னர் அய்மன் காலித் கைது செய்யப்பட்டுள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.ஆட்சியை பிடித்துள்ள ராணுவம், நாட்டின் பல பகுதிகளில் இணைய சேவையை முடக்கியுள்ளது. அரசு 'டிவி'யில் தேச பக்தி பாடல்களும், நைல் நதிக் காட்சிகளும் ஒளிபரப்பப்பட்டன.
இதற்கிடையே ராணுவத்திற்கு எதிராக தலைநகர் கார்தோம் மற்றும் ஓம்டுர்மன் நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் சாலைகளை மறித்து, டயர்களை தீயிட்டு எரித்து ராணுவத்தினரை நோக்கி வீசினர். இதையடுத்து ராணுவம், கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தைக் கலைத்தது.
ராணுவ புரட்சியை உயர்மட்டக் ஆட்சி குழு தலைவர் ஜெனரல் அப்துல் படா புர்ஹன் முன்னின்று நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் அப்துல்லா ஹம்டோக் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். மற்றவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை.சூடான் நிலவரம் குறித்து ஆப்பிரிக்காவிற்கான அமெரிக்க சிறப்பு துாதர் கவலை தெரிவித்துள்ளார். அவர், சூடான் ராணுவத்திடம் பேச்சு நடத்தி வருகிறார்.