மீண்டும் படம் இயக்கும் ஐஸ்வர்யா தனுஷ்

03.10.2021 10:31:18

ரஜினிகாந்த்தின் முதல் மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ், தமிழ் சினிமாவில் இயக்குனராக வலம் வருகிறார். இவர் ஏற்கனவே தனுஷின் நடிப்பில் வெளியான '3' என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து கௌதம் கார்த்திக்கை வைத்து 'வை ராஜா வை' என்ற படத்தை இயக்கினார்.

இந்த இரண்டு படங்களும் பிறகு எந்த படங்களும் இயக்காமல் இருந்து வந்த ஐஸ்வர்யா தனுஷ், தற்போது புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படத்தை பிரபல நிறுவனமான லைக்கா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தின் கதையை சஞ்சீவி என்பவர் எழுதி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் தயாராக இருக்கும் இப்படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பை வெளியிடவும், விரைவில் படப்பிடிப்பை துவங்கவும் ஐஸ்வர்யா தனுஷ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைக்கா தயாரிப்பு நிறுவனம், தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது.