மீன்களை ஒருங்கு சேர்க்கும் செயற்கைப் பண்ணைகள்

05.07.2021 12:06:02

 

கடந்த யூன்  8  ந் திகதி “சமுத்திரச் சூழல் தினம்” சர்வதேசரீதியாக கொண்டாப்பட்டது. அக்குறித்த காலப்பகுதியில் இலங்கை மேற்கு கரையில் கொழும்பு த்துறைமுகத்தை அண்மித்து எக்ஸ்பிரஸ் பேர்ள் என்ற கப்பல்  தீப்பிடித்து எரிந்து பாரிய சுற்றுச்சூழல் அனர்த்தத்தினை ஏற்படுத்தியிருந்தது.அதன் வடு இன்னும் ஓயவில்லை. பிடிப்பதற்குத் தடைசெய்ப்பட்டதும் ,அருகிவரும் பெறுமதி மிக்க உயிரிகளான கடல் ஆமைகளும்,டொல்பின்களும்,திமிங்லங்களும் செத்துமடியும் அவலங்கள் இன்னும் தொடர்கின்றன.

இது ஒருபுறம் இருக்க  மறுபுறத்தில்  இலங்கை வடக்கு கடற்பகுதியில் பாழடைந்த, கைவிடப்பட்ட   பெருந்தொகையான (40)  பஸ் வண்டிகள் கடற்றொழில் அமைச்சின் பணிப்புரையின் கீழ் கொண்டுபோய் அமிழ்த்தப்பட்டிருக்கிறது. மீன்வள  செயற்கை மீன் உறைவிடங்கள்  தந்திரோபாய நடவடிக்கை என இதற்குப் பொருள் கோடப்பட்டிருக்கிறது.  பாக்கு நீரிணைப்பகுதியில் இலங்கை  இந்திய கடலோர எல்லைப்பகுதியில் இலங்கையின் எல்லைப்பரப்பினுள் இந்த வண்டிகள் அமிழ்தப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. . அமிழ்த்தப்பட்ட மறுதினம் இந்திய மீனவர்கள்  தரப்பில்தமிழ் நாட்டில்  இதற்கு  எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றிருக்கிறது. பதிலுக்கு  முடிந்தால் “ரயில் பெட்டிகளையும் கொண்டு அமிழ்த்துவோம் “என அமைச்சர் சவால் விட்டுள்ளமை செய்திகளாக வெளிவந்தன. ஆகவே பஸ் வண்டிகளானது  குறித்த கடற்பரப்பில் அமிழ்த்தப்பட்டதற்கான நோக்கத்தை புரிந்து கொள்வதில் அதிகம் சிரமம் இருக்காது. ஒருவகையில் இது சரியானதுபோலவே படுகிறது.

மீன்களை ஒருங்கு சேர்க்கும் செயற்கை  உறைவிடங்கள   (fish aggregation devices)

பொதுவாக உலகில் பெரும்பாலான நாடுகளில்  மீன்பிடித்தொழிலின்  அபிவிருத்தி கருதி, மீன்களை ஒருங்கச்செய்யும் செயற்கையான    உறைவிடங்கள்   உருவாக்கப்பட்டு கடலின்  ஆழமான பகுதிகளில் இறக்கப்பட்டுப்  பயன்படுத்தப்பட்டு வருவது பொதுவான ஒரு விடயமாகவே உள்ளது. . சுண்ணாம்பு, சீமெந்து கற்கள் போன்ற மூலப்பொருட்களைக் கொண்டு  செயற்கையாக வடிவமைக்கப்பட்ட  பவளப்பாறைகள்,(artificial coral reefs) பல அறைகளைக்கொண்ட கொங்கிறீற்  உறைவிடங்கள்,போன்றவைகள் தவிர கைவிடப்பட்ட கொங்கிறீற் தூண்கள், உடைக்கப்பட்ட பாலங்கள் கட்டிடங்கள் போன்றவற்றிலிருந்து  பெறப்படும்   கற்றூண்களைக் கொண்டும்  இவ்வாறு செயற்கை உறைவிடங்கள் அல்லது கருவிகள்   வடிவமைக்கப்பட்டு மீன்பிடித்தலுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவைகள் கடற் சூழலுக்கு  அச்சுறுத்தலாக அமையாதவாறு அதிக ஆழமிக்க பகுதிகளில்  நிரந்தரமாகவும்,இடம் விட்டு  அசையாதவாறு   இருக்கத்தக்கவாறும்  வைக்கப்படுகின்றன.அத்துடன் பெரும்பாலும் ஏனைய மீன்பிடித்தல் நடவடிக்கைகளுக்குப் பங்கம் இல்லாதவாறும் நன்கு திட்டமிட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 1960களையடுத்து வந்த காலப்பகுதிகளில் அமெரிக்கா, பிரிட்டன், யப்பான் போன்ற நாடுகளில் ஆரம்பிக்கப்பட்டு இப்போது ஏனைய நாடுகளிலும் இந்த முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இலங்கையில் முன்னர்  இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெற்றமைக்கான பதிவுகள் எவையும்  கிடைக்கவில்லை. ஆயினும் வடக்கு கடற்பரப்பில்  கணவாய் பிடித்தலுக்காக கண்டல் குழைகள் கடலில் அமிழ்த்தப்பட்டு பயன் படுத்தப்பட்டு வருகின்றன. அத்துடன் கண்டல் மரக்குற்றிகள் பழைய படகுகள்,தூண்கள்,கார்ச்சட்டங்கள் போன்றனவும் பரவலாக அமிழ்த்தப்பட்டு மீன்களை ஒருங்கு சேரவைத்து டைனமட்வெடிவைத்து சட்டபூர்வமற்ற முறையில்  மீன்பிடியில் ஈடுபட்டு வருவதும்  குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் பல நாடுகளில் இன்று பழுதடைந்த, கைவிடப்பட்ட ,அதன் அடிச்சட்டங்கள், பஸ்வண்டிகள்,ட்ரம் கார்கள் போன்ற பெரும் வாகனங்களும் இவ்வாறான செயற்கை உறைவிடங்களாக  பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இத்துடன் கைவிடப்பட்ட  இராணுவ ட்ரக்வண்டிகள் ,டாங்கிகள் ,யுத்தக்கப்பல்களும் கடலில் மீன்பிடி உறைவிடங்களாகப்பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இவைதவிர விபத்துகுள்ளாகி கடலில் மூழ்கிய வர்த்தக கப்பல்கள், ,யுத்தக்கப்பல்கள்,விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ,மீன்பிடி கப்பல்கள் போன்றவைகளும் இனங்காணப்பட்டு  மீன்களுக்கான உறைவிடங்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.  இவைகள் சூழலுக்கும் ,மீன்பிடி வலைகளைப் பயன்படுத்துவதற்கும் அச்சுறுத்தலானவையாக இருந்த போதிலும் கடலில் இருந்து மீட்க முடியாத ஒரு நிலையில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக  பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

பொதுவாக கைவிடப்பட்ட வாகனங்கள் உலோகம் சார்ந்தவை, அவற்றின் டயர்கள் ,எரிபொருள் தாங்கிகள் இரசாயனகழிவுகளாக நீரில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியன. அதனால் அவைகள் துப்புரவு செய்யப்பட்டு,டயர்கள் அகற்றப்பட்டு   மிக அவதானமாகவே கடலின் உறைவிடங்களாகப் பயன் படுத்தப்பட்டு வருகின்றன.

2013  ஆம் ஆண்டு கணிப்பீட்டின்படி உலகளாவிய ரீதியில் 1,20,000   மீன் உறைவிடங்கள் காணப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இத்தகைய செயற்கை கருவிகள் கடல்வாழ் உயிரிகளின் உறைவிடங்களாகவும்,பாதுகாப்பு. இனப்பெருக்கவிருத்தி,உணவுபெறல் போன்றவற்றிற்கு உறுதுணையாக அமைகின்றன.ஒரு வகையில் மீனப்பிடி அபிவிருத்திக்கு இவை உதவுகின்ற போதிலும் கடற்சூழலுக்குஅச்சுறுத்தலானதாவும் விளங்குகின்றது.

இவ்வாறான ஒரு பின்னணியில் வடபகுதி கடற்பரப்பிலும் இத்தகைய செயற்கை உறைவிடங்களை அமைத்து மீன்வளத்தைப் பெருக்கும் நடவடிக்கைகளானது  வரவேற்கக்கூடியதே.ஆயினும் பின்வரும் எதிர்மறையான  விளைவுகள் ஏற்பட வாய்ப்புக்கள் உண்டு .

பொருத்தமற்றசூழலும் கில்வலை மீன்பிடி பாதிப்பும்.

இங்கு பஸ்வண்டிகள் அமிழ்தப்பட்ட கடற்பகுதியானது  செயற்கைப் பண்ணைகளுக்கு அல்லது உறைவிடங்களுக்குப் பொருத்தமற்ற பகுதியாகவே உள்ளது என்பது எமது கருத்து. காரணம் குறித்த கடற்பகுதியானது சிறிய நீர்ப் பரப்பைக்கொண்டதுடன் குறைவான (20 மீ  .) ஆழம் கொண்ட  பகுதியாகவும் உள்ளது. அத்துடன்  பெரும்பாலானோர் கில்வலைகளைப் பயன்படுத்துகின்ற ஓர் பகுதியாகவும் உள்ளது.இத்தகைய வலைகளுக்கு (வழிச்சல்( drift net) முறைகளுக்கும் அடியிடு கில்வலைகளுக்கும்    (bottom gill net))தூண்டில் வரிசைகளுக்கும்  பாதிப்பினை ஏற்படுத்தலாம்.

பேய் மீன்பிடி (ghost fishing)

பலநாடுகளிலும் ஆழ்கடலில் பயன்படுத்தப்படுகின்ற பல்வகை வலைத் தொகுதிகள் எதிர்பாராதவிதமாக கடலில் தொலைந்து போகின்ற சந்தர்ப்பங்களில் அவைகள் நீரோட்டத்தினால் அடித்துச் செல்லப்பட்டு இவ்வாறான செயற்கை கருவிகளில் சிக்குண்டு அழிவடைகின்றன .அத்தோடு கைவிடப்பட்ட நிலையில் அவ்வலைகளில்  மீன்களும் சிக்குண்டு  வீணாகின்றன இது சாத்தான் மீன்பிடி (ghost fishing ) அல்லது பேய் மீன்பிடி என அழைக்கப்படுகிறது.வருடம் பல மில்லியன் ரூபா பெறுமதியான மீன்கள் இவவாறு  வீணாவதாக சுட்டிக் காட்டப்படுகின்றது.இப்பகுதியிலும் இவ்வாறான நிலைமைகள் எதிர்காலத்தில்  ஏற்படலாம்.

வங்காள விரிகுடாச்சூறாவளித்தாக்கம்

மேலும் இக்குறித்த கடற்சூழலானது வங்காளவிரிகுடாவிவில் நவம்பர்_ டிசம்பரில் ஏற்படும் தாழமுக்கம்,மற்றும்   வடகீழ் பருவக்காற்று நீரோட்ட வேகம் (  N.E.Mosoon current )காரணமாக அமிழ்தப்பட்ட பஸ்வண்டிகள் போடப்பட்ட இடத்தில் இருந்து  நகர்த்தப்பட வாய்ப்புக்கள் உள்ளதாகவும் சிலர் தெரிவித்திருந்தனர். சூறாவளிக் காலத்தில்    இதற்கான வாய்ப்பு நிறையவே உண்டு.

 

டைனமெட் வெடிவைத்து மீன்பிடியில் ஈடுபடல்

வண்டிகள் அமிழ்த்தப்பட்ட பகுதிகளில் மீன்கள் ஒருங்குசேருவதால் அங்கு ஜி.பி.எஸ் உதவிகொண்டு டைனமெட் வெடிவைத்து மீன்பிடியில் ஈடுபடக்கூடிய வாய்ப்புக்களை நிராகரிக்க முடியாது .வடக்கில் கண்டல் மரக்குற்றிகள் மற்றும் கற்றூண்கள்,பழைய படகுகள் கடலின் அமிழ்தப்பட்டு அங்கு ஒருங்கு சேரும் மீன்கள் வெடிவைத்து பிடிக்கப்படும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதனால் பெரமளவு கண்டல் காடுகள் மன்னாரில் அழிவடைந்துள்ளன.இவ்வாறான ஒரு நிலை குறித்த பகுதிகளில் ஏற்பட நிறைய வாய்ப்புள்ளது .

இந்திய இழுவைமடி மீன்பிடி

இந்திய இழுவைமடித்தொழிலை தடைசெய்வதற்கான ஓர் தந்திரோபாய நடவடிக்கையாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது என பலரும் தமது கருத்துக்களை கூறியிருந்தனர். அடித்தள இழுவைமடிகளை பாதிக்ககூடியதாக இது அமையும்.பல காலமாக தடைகளையும் மீறி இந்திய மீனவர்கள் வடபகுதி கடலில் வளங்களைச் சூறையாடிச்செல்லும் போக்கு அதிகரித்துள்ளது அரசு மட்டத்திலும் மீனவர்கள் மட்டத்திலும் பலசுற்றுப் பேச்சு வார்த்தைகள் நடாத்தியும் பயனில்லை. இந்திய மத்திய மாநில அரசுகள் அத்து மீறலைத் தடுத்து  இதற்கான மாற்றுவழிகளைச் செய்திருப்பின் இவ்வாறான விரும்பத்தகாத ஓர் நடவடிக்கை மேற்கொள்ள வாய்ப்பில்லை என்பது எமது கருத்து. மத்திய மாநில அரசுகள் இழுவைமடித்தொழிலை தடைசெய்வது மிக அவசியம்.

மீன்வளப்பெருக்கத்தினை இலக்காக கொண்டு மேற்கொள்ளப்படும் இவ்வாறான செயற்பாடுள் வரவேற்கத்தக்கது. இவை உள்ளூர் மீனவர்களுடன் கலந்தரையாடி முன்னெடுக்கப்படலாம்.வடக்கில்   வடமராட்சி வட கிழக்குசார்ந்துள்ள  பேதுரு மீன்தளத்திற்கு (pedro bank) அப்பாலுள்ள ஆழமான பகுதிகள் இதற்குப் பொருத்தமாக அமையும்.உரியவாறு திட்டமிட்டு இவை மேற்கொள்ளப்பட வேண்டும்.

எது எவ்வாறாக இருப்பினும்  கடலில் குப்பைகளைக் கொட்டுவது சட்டத்தை மீறும் ஓர் செயல் ஆகும் என்பது எமது தாழ்மையான கருத்து. இதன் விளைவுகள் பிள்ளையார் பிடிக்கப்போய்……

போகப் போகத் தெரியவரலாம்.

கலாநிதி சூசை ஆனந்தன்