எனக்கு சாதியின் மீது ஆர்வம் இல்லை :

25.04.2024 09:11:44

நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19 ஆம் திகதி முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு எதிர்வரும் ஏப்ரல் 26 ஆம் திகதி 88 தொகுதிகளில் நடைபெறவுள்ளது. இன்று மாலையுடன் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் முடிவடைகிறது.

 

இந்நிலையில், சமீபத்தில் 25 மக்களவை தொகுதிகளை கொண்ட ராஜஸ்தானில், பிரதமர் மோடி பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தார். அதில், “காங்கிரஸ் தேர்தல் அறிக்கையானது, பொது மக்களிடம் உள்ள சொத்தை எடுத்து பிறருக்கு கொடுக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, தேசத்தின் செல்வத்தில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள். இதன்பொருள், அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்” என்று சர்ச்சை எழுப்பும் வண்ணம் பேசியிருந்தார்.

முதற்கட்ட பிரச்சாரத்தில் இங்கனம் பேசாத பிரதமர் மோடி, தற்போது இரண்டாம் கட்ட தேர்தலில் மதத்தை வைத்து சர்ச்சை பேச்சுக்களை தொடர்ந்து வருகிறார் என பலர் குற்றஞ்சாட்டி வருகினறனர். இந்நிலையில், இதற்கு பதிலடிக்கொடுக்கும் விதமாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தற்போது பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.அதில் அவர், “எனக்கு சாதியின் மீது ஆர்வம் இல்லை. நியாயத்தின் மீதுதான் ஆர்வம். 90வீத இந்தியர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக நான் கூறியதால் பிரதமர் என்னை விமர்சிக்கிறார். காங்கிரஸின் புரட்சிகரமான தேர்தல் அறிக்கையை கண்டு பிரதமர் பயந்துவிட்டார்.

பெரும் தொழிலதிபர்களுக்கு கடன் தள்ளுபடியாக பாஜக அரசு வழங்கிய ரூ. 16 லட்சம் கோடியை 90வீத மக்களுக்கு வழங்குவதே எங்கள் தேர்தல் அறிக்கையின் நோக்கம் என குறிப்பிட்டுள்ளார்.