ஹிந்துத்வா எதிர்ப்பு மாநாடு

22.08.2021 15:16:51

ஹிந்துத்வா எதிர்ப்பு மாநாட்டை ஆதரிக்க வேண்டாம்' என, அமெரிக்க பல்கலைகளுக்கு, ஹிந்து அமெரிக்க அறக்கட்டளை வேண்டுகோள் விடுத்துள்ளது.

உலகளவில் ஹிந்துத்வா கொள்கை எதிர்ப்பு மாநாடு, 'ஆன்லைன்' வாயிலாக நடக்கவுள்ளது. இந்த மாநாட்டிற்கு அமெரிக்காவைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட பல்கலைகள் ஆதரவு தெரிவித்துள்ளன.இந்த மாநாட்டை நடத்துவோர், பங்கேற்போர் உள்ளிட்ட விபரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. எனினும் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஹிந்துத்வா கொள்கையை எதிர்க்கும் முக்கிய புள்ளிகள் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து அமெரிக்காவில் உள்ள ஹிந்து அமெரிக்க அறக்கட்டளை உள்ளிட்ட பல்வேறு ஹிந்து அமைப்புகள், 'ஹிந்துத்வா எதிர்ப்பாளர்களை ஒருங்கிணைக்கும் மாநாட்டிற்கு ஆதரவு அளிக்க வேண்டாம்' என, அமெரிக்க பல்கலைகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன.'இந்த மாநாடு கல்வி தொடர்பானது அல்ல; அரசியல் சார்ந்தது என்பதால் இதற்கு ஆதரவளித்தால், பல்கலைகளின் மதிப்பும், மாண்பும் பாழாகி விடும்' என, ஹிந்து அமைப்புகள், அமெரிக்க பல்கலைகளுக்கு தெரிவித்துள்ளன.

இதையடுத்து மாசாசூசெட்ஸ் பல்கலை, டல்ஹவுசி பல்கலை ஆகியவை மாநாட்டிற்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றுள்ளன.