மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறாரா எல்.முருகன்?
|
மத்திய இணையமைச்சராக இருக்கும் எல்.முருகன், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழகத்திற்கே வந்துவிடலாம் என எண்ணியுள்ளாராம். அவர் வரும் தேர்தலில் அவிநாசி தொகுதியில் போட்டியிடலாம் என எண்ணியுள்ளாராம். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி (தனி) தொகுதியில் எம்எல்ஏவாக இருப்பவர் அதிமுகவை சேர்ந்த தனபால். இவர் முன்னாள் சபாநாயகராகவும் இருந்தார். இவரது மகன் லோகேஷ் தமிழ்ச் செல்வன். |
|
இவர் கடந்த 2024 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்த நிலையில் அவருடைய தந்தை தனபாலுக்கு அவ்வப்போது உடல்நிலை சரியில்லாமல் போவதால், தொகுதி பக்கமே வருவதில்லையாம். தனபால் தனபால் எங்கே என கேட்டு அந்த தொகுதி மக்கள் போஸ்டர் ஒட்டாத குறையாக அதிருப்தியில் இருக்கிறார்களாம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அத்திக்கடவு- அவிநாசி திட்டம் தொடர்பான அதிமுக பாராட்டு விழாவில் மட்டும் தனபால் கலந்து கொண்டாராம். அதன் பிறகு தொகுதி பக்கம் தலை வைத்து கூட படுப்பதில்லை என்கிறார்கள் தொகுதி மக்கள். இந்த நிலையில் தனபால் செயல்படாமல் உள்ளதாலும், கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்பதாலும் வரும் தேர்தலில் அதிமுக சார்பில் களம் காணும் வேட்பாளருக்கு வெற்றி உறுதி என்கிறார்கள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் முயற்சித்து வந்தார். அவர் அதிமுக சார்பில் விருப்பமனுவையும் கொடுத்திருந்தார். ஆனால் அவருக்கு சீட் வழங்கக் கூடாது என பலர் போர்க் கொடி உயர்த்தி, அதை தலைமைக்கே கொண்டு சென்றுவிட்டனராம். அதிமுகவில் ஐடி விங்கில் இருந்த லோகேஷ், அவிநாசி தொகுதி பொறுப்பாளராகவும் எம்ஜிஆர் இளைஞரணி மாநில இணைச் செயலாளராகவும் இருந்து வந்தார். லோகேஷ் மீது புகார் சென்றதால் அவருக்கு சீட் கிடைக்காது என்றே சொல்லப்பட்டது. பல்லடம் தொகுதி மேலும் பல்லடம் தொகுதி எம்எல்ஏவாக இருக்கும் எம்.எஸ்.எம்.ஆனந்தனுக்கு போட்டியாக இந்த முறை தனக்கு சீட் வேண்டும் என கரைப்புதூர் நடராஜன் முயற்சிக்கிறாராம். இதனால் ஆனந்தன், திருப்பூர் வடக்கு, தெற்கு, அவிநாசி உள்ளிட்ட தொகுதியிலாவது தனக்கு சீட் ஒதுக்க வேண்டும் என கோரி வருகிறாராம். இதையெல்லாம் கேள்விப்பட்டு கடுப்பான லோகேஷ், திடீரென அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்துள்ளார். அங்கு தனக்கு அவிநாசி தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை கேட்டு வருகிறாராம். அதிமுகவில் தனபால் செயல்படாததால் அந்த சந்தர்ப்பத்தை பாஜகவின் எல்.முருகன் பயன்படுத்த முயற்சிக்கிறாராம். இவர் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தற்போது மத்திய இணையமைச்சராக இருந்து வருகிறார். இவர் அந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக சட்டசபைக்குள் நுழைந்துவிட வேண்டும் என விரும்புகிறாராம். அவிநாசி தொகுதியில் போட்டியிட விரும்பி, தமிழகம் வரும் போதெல்லாம் அவிநாசிக்கு வந்துவிடுகிறாராம். மேலும் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்துவிட்டதால் தனக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக எல்.முருகன் கருதுகிறார். |