பெரம்பூரை அதிரவைத்த சூட்கேஸ் கொலை.
|
சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் நான்காவது பிளாட்ஃபார்மில் நேற்று (05/06/2026) காலை 7 மணியளவில் சூட்கேஸ் ஒன்று சந்தேகத்திற்கிடமான விதத்தில் கிடந்தது. நீண்ட நேரம் அதே இடத்தில் இருந்த சூட்கேஸில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அங்கு வந்த சுமைதூக்கும் தொழிலாளியான முனுசாமி என்பவர் ரயில்வே காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக அங்கு வந்த ரயில்வே போலீசார் அந்த சூட்கேஸை கைப்பற்றி திறந்து பார்த்தபோது உள்ளே 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று ரத்த காயங்களுடன் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. |
|
தலை, மற்றும் அந்தரங்க உறுப்பு, கை, கால்கள் இல்லாமல் வெட்டப்பட்டு கிடந்த அடையாளம் தெரியாத அந்த சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அந்த சூட்கேஸ் புதியதாக இருந்ததால் கொலை செய்து வீசுவதற்காகவே வாங்கப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்தனர். சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் ஜான்சி வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் ஜான்சி உடல் கைப்பற்ற இடத்தில் இருந்து ஓடிச்சென்று பெரம்பூர் கேரேஜ் பகுதியில் உள்ள புதர் பகுதியில் போய் நின்றது. அப்பகுதியில் உள்ள சாலையில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். தலை வெட்டப்பட்டுள்ளதால் கொலையான நபர் யார் என்பது தெரியாமல் போலீசார் திணறி வருகின்றனர். மேலும் தலை எங்கே வீசப்பட்டுள்ளது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். பட்டப்பகலில் ரயில் நிலையத்தில் அதுவும் முதல்வர் தொகுதியில் சூட்கேஸில் சடலம் கைப்பற்றப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. போலீசார் எட்டு தனிப்படைகள் அமைத்து இந்த கொலை தொடர்பாக தீவிரமாக விசாரித்து வருகின்றனர். |