லண்டனில் ஏர் இந்தியா விமான பணிப்பெண் மீது தாக்குதல்!
லண்டனில் ஏர் இந்தியா விமான பணிப்பெண் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஹீத்ரோ விமான நிலையத்தில் உள்ள ராடிசன் ஹோட்டலில் அந்த பெண் தங்கியிருந்தார். நள்ளிரவு 1.30 மணியளவில் அவரது அறைக்குள் மர்ம நபர் ஒருவர் புகுந்தார். துணிகளை தொங்கவிட்டிருந்த ஹேங்கரால் விமான பணிப்பெண்ணை தாக்கினார். இதற்குப் பிறகு, அவர் அந்தப் பெண்ணை படுக்கையில் இருந்து தரையில் இழுத்தார். |
பாதிக்கப்பட்ட பெண் கதவை நோக்கி நடக்க முயன்றார். கத்தி கூச்சலிட்டபோது, சுற்றுவட்டார அறையில் தங்கியிருந்த சக விமான குழுவினர் அங்கு வந்தனர். அவர்கள் தாக்குதல்தாரியை பிடித்து பொலிஸில் ஒப்படைத்தனர். இதையடுத்து அந்த பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அந்த பெண் இந்தியா திரும்பியுள்ளார், அங்கு அவருக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டு வருகிறது. இச்சம்பவத்தையடுத்து, அறிக்கை ஒன்றை வெளியிட்ட ஏர் இந்தியா விமான ஊழியர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. "குழு பாதுகாப்பு எங்களுக்கு மிக முக்கியமானது. லண்டனில் நடந்த சம்பவத்தால் நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம். இந்த ஹோட்டல் ஒரு சர்வதேச சங்கிலியின் ஒரு பகுதியாகும். இத்தகைய சூழ்நிலையில், இதுபோன்ற தாக்குதல் அங்கு நடப்பது ஏமாற்றமளிக்கிறது" ஏர் இந்தியா உள்ளூர் பொலிஸ் மற்றும் ஹோட்டல் நிர்வாகத்துடன் தொடர்பில் உள்ளது என்று நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். இச்சம்பவத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, விமான பணிப்பெண்ணின் தனியுரிமை மதிக்கப்பட வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனிடையே, அந்த பெண் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக சில ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. ஆனால், இதுகுறித்து அந்த பெண்ணோ, விமான நிறுவனமோ எந்த தகவலும் அளிக்கவில்லை. தகவல்களின்படி, தாக்குதல்தாரி ஒரு நைஜீரிய குடிமகன் ஆவார். அவர் ஒரு சாதாரண வீடற்ற மனிதராக இருப்பார் என்று ஊகிக்கப்படுகிறது. அவர் இரவில் யாருக்கும் தெரியாமல் ஹோட்டலுக்குள் நுழைந்தார். பின்னர் அவர் அந்த பெண்ணின் அறைக்குள் நுழைந்து அவரை தாக்கியுள்ளார். |