பி டி சார் - விமர்சனம்
இசையமைப்பாளராக அறிமுகமாகி 25 ஆவது திரைப்படத்திற்கு இசையமைத்திருக்கும் ஹிப் ஹொப் தமிழா ஆதி கதையின் நாயகனாகவும் நடித்திருக்கும் திரைப்படம் 'பி. டி. சார்'. 'கல்வித்தந்தை' ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில் உருவான இந்த திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
தமிழகத்தின் முன்னணி நகரங்களில் ஒன்றான ஈரோடு எனும் மாநகரில் பிரபலமான தனியார் கல்வி நிறுவனம் செயல்படுகிறது. அந்த தனியார் கல்வி நிறுவனத்தின் தாளாளராக ஜிபி ( தியாகராஜன்) இருக்கிறார். அந்த தனியார் பாடசாலையில் கனகவேல் ( ஹிப் ஹொப் ஆதி தமிழா) உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றுகிறார். அவருக்கும் அதே பாடசாலையில் ஆங்கில மொழியை கற்பிக்கும் ஆசிரியையான வானதி( கஷ்மிரா பரதேசி) க்கும் இடையே காதல் ஏற்படுகிறது. கனகவேல் மாணவர்களின் மனதை கவரும் வகையில் அந்த பாடசாலையின் மொட்டை மாடியில் மேஜிக் வால் எனும் பெயரில் மாயாஜால சுவர் ஒன்றை உருவாக்குகிறார். இந்த சுவற்றில் மாணவர்கள் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள இயலாத தங்களின் உள்ளக்கிடக்கையை வார்த்தைகளால் எழுதுகிறார்கள். இதனால் இந்தப் பாடசாலை பிரபலமாகிறது. பாடசாலையில் தாளாளரும் இதனை உருவாக்கிய கனகவேலை நேரில் அழைத்து பாராட்டுத் தெரிவிக்கிறார்.
இந்நிலையில் கனகவேலின் ஜாதகம் சரியில்லை என்பதற்காக அவரை திருமணம் செய்து கொள்ளும் வரை எந்த வம்பு தும்புக்கும் செல்லாமல் அவர்களுடைய பெற்றோர்கள் பொத்தி பொத்தி வளர்க்கிறார்கள். அதே பாடசாலையில் பயிலும் மாணவியும், கனகவேல் வசிக்கும் வீட்டின் அருகில் உள்ள மாணவியுமான அனிகா சுரேந்திரனுக்கு பாலியல் ரீதியான பிரச்சனை ஒன்று ஏற்படுகிறது. அதுவும் அவர் படிக்கும் பாடசாலையிலேயே அதனை எதிர்கொள்கிறார். இதனால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ள தீர்மானிக்கிறார். அந்த தருணத்தில் அவரை கனகவேல் காப்பாற்றுகிறார். அதன் பிறகு பாலியல் ரீதியிலான பிரச்சனை... எப்படி சமூக பிரச்சனையாக மாறுகிறது என்பதையும், அதனை கனகவேல் எப்படி எதிர்கொள்கிறார் என்பதையும், பாதிக்க பெண்ணுக்கு நீதி கிடைத்ததா? இல்லையா? என்பதையும் விவரிப்பது தான் இப்படத்தின் கதை.
பி டி சார் எனப்படும் உடற்கல்வி ஆசிரியர் கதாபாத்திரத்திற்கு ஹிப் ஹொப் தமிழா ஆதி பொருத்தமாக இருக்கிறார். அவர் பாடசாலை மாணவர்களுடன் உற்சாகமாக கலந்துரையாடுவதும், விளையாடுவதும் ரசனையாக படமாக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆங்கில ஆசிரியையான வானதியுடன் காதலில் ஈடுபடும் போதும் ரசிக்கவே வைக்கிறார்.
பாலியல் ரீதியிலான பிரச்சனையாக கதையோட்டம் தடம் மாறும்போது அதைக் கேட்கும்போது நடிப்பதில் தடுமாறுகிறார் ஹிப் ஹொப் தமிழா ஆதி.
கதையின் நாயகியாக பாலியல் சுரண்டலுக்கு ஆளாகும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அனிகா சுரேந்திரன் அளவான நடிப்பை வழங்கி அசத்தலாக பார்வையால் மனதில் இடம் பிடிக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் கஷ்மிரா பர்தேசி தமிழ் சினிமாவின் வழக்கமான நாயகிக்கான பணியை கச்சிதமாக செய்து காணாமல் போகிறார்.
இவர்களை கடந்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையாக நடித்திருக்கும் இளவரசு நேர்த்தியான நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதில் சிறந்த குணசித்திர நடிகர் என்ற அடையாளத்தை புதுப்பித்துக் கொள்கிறார்.
கல்வி நிறுவனத்தில் பாலியல் சுரண்டல் இயல்பாக நடைபெறுகிறது. இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று இயக்குநர் முயற்சித்திருக்கிறார். ஆனால் அதற்கான காட்சிகளையும், காட்சி அமைப்புகளையும் வித்தியாசமாக சொல்லாமல் வழக்கமான கமர்சியல் பார்முலாவில் சொன்னதால் மனதில் பதியாமல் நுனிப்புல் மேய்வது போல் கடந்து செல்கிறது. பாலியல் சுரண்டலால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு இந்த சமூகம் கொடுக்கும் அழுத்தமும், நெருக்கடியும் அதிகம் என்று கூற முயற்சித்திருக்கும் இயக்குநர்... அதனையும் பார்வையாளர்கள் மனதில் அழுத்தமாக பதிக்க தவறி இருக்கிறார்.
உச்சகட்ட காட்சியில் யாரும் எதிர்பார்க்காத சுவாரசியமான திருப்பத்தை வைத்திருப்பதற்காகவே இயக்குநரை பாராட்டலாம்.
ஹிப் ஹொப் தமிழா ஆதியின் இசையில் 25 வது படம் என்பதால் வித்தியாசமாக ஏதேனும் இருக்கும் என்று எதிர்பார்த்தால் வழக்கமான பாடலாகவே இருக்கிறது. எதுவும் மனதில் தங்காமல் கடந்து போகிறது. ஆனால் பின்னணி இசையில் தன் திறமையை நிரூபித்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளரும், படத்தொகுப்பாளரும் இயக்குநரின் கற்பனைக்கு தங்களாலான முழு பங்களிப்பை வழங்கி ரசிகர்களுக்கு ஓரளவு ஆறுதல் தருகிறார்கள்.