''ரசிகர்களின் அன்பை ஆனந்தமாக அனுபவிக்கிறேன்"
தென்னிந்தியாவில் முன்னணி கதாநாயகியாக திகழும் ராஷ்மிகா மந்தனா, பாலிவுட்டிலும் தனது திறமையை காட்டி வருகிறார்.
தென்னிந்தியாவில் முன்னணி கதாநாயகியாக திகழும் ராஷ்மிகா மந்தனா, பாலிவுட்டிலும் தனது திறமையை காட்டி வருகிறார். சினிமாக்களில் மட்டுமின்றி, நிஜ வாழ்க்கையிலும் எப்போதும் உற்சாகமாக இருப்பது அவரது பழக்கம். அவரிடம் பேசியதில் இருந்து.. சினிமாவுக்கு வந்து குறைந்த காலத்திலேயே பெயரும், புகழும் பெற்று விட்டீர்கள். அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்? சினிமாவுக்கு வந்து 6 ஆண்டுகள் ஆகிவிட்டன.
எவ்வளவோ திறமையான, அழகான நடிகைகள் இருந்த போதிலும், சினிமாவுக்கு வந்தது முதலே அனைத்து மொழிகளிலும் மிகச்சிறந்த வாய்ப்புகள் கிடைத்தது எனது அதிர்ஷ்டம். என்னுடைய உழைப்பு, எனக்கு கிடைக்கும் வாய்ப்புகள், எனது இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்த ரசிகர்கள், எல்லாவற்றிற்கும் மேலாக கடவுளின் ஆசிர்வாதம் தான் எனது வளர்ச்சிக்குக் காரணம். சினிமாவில் நீங்கள் கற்றுக்கொண்டது என்ன?
பொறுமை, இரக்கம், தன்னடக்கம் இப்படி எத்தனையோ விஷயங்களை சினிமா எனக்கு கற்றுக் கொடுத்தது. நான் எப்படி ஆசைப்படுகிறேனோ, அப்படியே பொதுமக்களும் என்னைப் பார்க்கிறார்கள். நான் மற்றவர்களின் நேரத்தையும், முயற்சிகளையும் மிகவும் மதிக்கிறேன். ஒரு நடிகையாக தினமும் ஏதோ ஒரு புதிய விஷயத்தை கற்றுக்கொள்கிறேன். இதெல்லாம் என்னோடு சேர்ந்து பணியாற்றும் அனைவரின் மூலமாகவே சாத்தியமானது.
'புஷ்பா' படத்துக்குப் பிறகு நீங்கள் நடித்த பல படங்கள் வெளிவந்தாலும், அந்தப் படத்தின் தாக்கம் இன்னும் உங்கள் மீது இருக்கிறதே... இதற்கு என்ன காரணம்? 'புஷ்பா' ஒரு அருமையான கதை. படத்தை வடிவமைத்த விதம் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. அதனால்தான் இப்போதும் அந்தப் படத்தின் புகழ் என்னைப் பின்தொடர்கிறது. இந்தப் படத்துக்கு பிறகு அனைத்து மொழி சினிமாக்களிலும் ரசிகர்களின் அன்பை பெற்றேன். எங்கு சென்றாலும் 'ஸ்ரீவள்ளி' என்ற பெயர்தான் கேட்கிறது.
இது எல்லாமே அற்புதமான அனுபவம். 'பான்-இந்தியா' நடிகை என்ற அடைமொழியை எப்படி பார்க்கிறீர்கள்? நான் எப்போதுமே பல மொழிகளை கற்றுக்கொள்ள விரும்புவேன். என் படங்கள் மூலம், என் குரல் மூலம் ரசிகர்களுக்கு நெருக்கமாக இருக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை. எனவே 'பான்-இந்தியன் ஸ்டார்' என்ற 'கான்செப்ட்' எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
என்னை பொறுத்தவரை நான் என்னால் முடிந்த வரைக்கும், உலக அளவில் உள்ள ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க முயற்சிகள் செய்து கொண்டே இருப்பேன். அதற்காக மேலும் பல மொழிகளை கற்றுக் கொள்வேன்.
நான் தெலுங்கில் ஒப்பந்தமான படங்களில் நடித்து முடித்த நிலையில், புதிய கதைகளை கேட்கத் தொடங்கினேன். சரியான சமயத்தில் இந்த வாய்ப்பு அப்படித்தான் எனக்கு வந்தது. நல்லதொரு வாய்ப்பு, நல்ல நேரத்தில் கிடைத்தது. நான் நடிக்க விரும்பிய நடிகருடன் இணைந்து நடிக்க கிடைத்த வாய்ப்பு, என் வாழ்வில் மிகப்பெரிய சந்தோஷம். பெயர், புகழுக்கிடையே உங்கள் தனிப்பட்ட விருப்பங்கள் பாதிக்கப்படுகிறது அல்லவா... இதனை எப்படி பார்க்கிறீர்கள்?
இந்தத் தொழிலில் இருப்பவர்களுக்கு, இது தவிர்க்க முடியாத ஒன்று. இதில் நான் மட்டும் விதிவிலக்கு அல்ல. ரசிகர்கள் எங்கு சென்றாலும் என்னை ஆதரிக்கும்போது, நான் அதை சந்தோஷமாகவே ஏற்றுக்கொள்கிறேன். ஏனெனில் நான் இதைத்தானே எதிர்பார்த்தேன். எந்த உறவுமே இல்லாத என் மீது, ரசிகர்கள் காட்டும் அன்புத் தொல்லையை நான் ஆனந்தமாக அனுபவிக்கிறேன்.
உங்கள் சொந்த மாநிலமான கர்நாடகாவிலேயே உங்கள் படங்களை தடை செய்ய முயற்சி நடப்பதாக கூறப்படுகிறதே... ஏற்கனவே அதற்கு பலமுறை விளக்கம் அளித்துவிட்டேன். எனக்கு முதன்முதலில் கன்னட சினிமா தான் வாய்ப்பு அளித்தது. கன்னட சினிமா மட்டுமல்ல, தமிழ், தெலுங்கு, இந்தி என எந்த மொழி சினிமாவையும் நான் குறைத்து மதிப்பிட மாட்டேன். அனைத்து மொழி ரசிகர்களும் எனக்கு ஆதரவு அளித்ததால்தான், நான் இந்த அளவிற்கு வளர்ந்து இருக்கிறேன்.
கன்னடத்தில் தொடங்கி இந்தியாவில் உள்ள அனைத்து மொழி ரசிகர்களுக்கும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். நடிகர்-நடிகைகள், இயக்குனர்கள் யாராக இருந்தாலும் சரி, அவர்கள் வளர்ந்து பெரிய நிலையை எட்டுவதற்கு ரசிகர்கள்தான் அஸ்திவாரம். ரசிகர்களுக்கு நீங்கள் தெரிவிக்க விரும்பும் பொங்கல் வாழ்த்து... அனைவருமே இனிமையாக, மகிழ்ச்சியாக இருக்கவேண்டும். அனைவரது வாழ்விலும் வளமை, அமைதி, சந்தோஷம், ஆரோக்கியம் பெருக வேண்டும். இதுவே எனது விருப்பமும், வாழ்த்தும். பொங்கலோ... பொங்கல்.