டெல்லி சென்றடைந்தார் முதல்வர் விஜய்!
|
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் ஆட்சிமன்றக் கூட்டம் நடைபெற உள்ளது. இதனையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இன்று (10.06.2026) காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றார். அதன்படி டெல்லிக்கு வந்தடைந்த முதலமைச்சர் விஜய்க்குத் தமிழ்நாடு இல்லத்தில் தலைமைச் செயலாளர் மு. சாய்குமார், மலர்க்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தார்.
|
|
அதே போன்று தமிழ்நாடு இல்லத்தின் தலைமை உள்ளுறை ஆணையரும், கூடுதல் தலைமைச் செயலாளருமான ஆர். ஜெயாவும் மலர்க்கொத்து வழங்கி வரவேற்றார்.அதன் தொடர்ச்சியாக முதலமைச்சர் விஜய் அங்கு காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இந்த நிதி ஆயோக் கூட்டத்தில் மாநில வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் மத்திய-மாநில கூட்டுறவு கூட்டாட்சி போன்ற முக்கியக் கொள்கைகள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது. அப்போது, தமிழ்நாட்டிற்குத் தேவையான முக்கியத் திட்டங்கள் மற்றும் துறை ரீதியான கூடுதல் நிதி ஒதுக்கீடு கோரிக்கைகளை முதலமைச்சர் முன்வைப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதிலும் குறிப்பாக, காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகா மேற்கொள்ள முயலும் மேக்கேதாட்டு அணைத் திட்டத்திற்கு அனுமதி மறுத்தல், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பது, மற்றும் நெடுஞ்சாலைகள், ரயில்வே, தொழில் வழித்தடங்கள் போன்ற முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து நிதி ஒதுக்கீடு செய்யக் கோருதல் போன்ற மாநில நலன் சார்ந்த கோரிக்கைகளை முதலமைச்சர் விஜய் வலியுறுத்த உள்ளார் எனக் கூறப்படுகிறது. அதேசமயம் முதலமைச்சர் விஜய், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோரை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்துப் பேச உள்ளார். மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரையும் சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. நாளை (11.06.2026) நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தின் இரு அமர்வுகளிலும் பங்கேற்ற பின், இரவு பிரதமர் மோடி அளிக்கும் சிறப்பு விருந்திலும் முதலமைச்சர் விஜய் கலந்து கொள்ள உள்ளார். அதனைத் தொடர்ந்து அலுவல் ரீதியான சந்திப்புகளை முடித்துக் கொண்டு, ஜூன் 12 அன்று முதலமைச்சர் விஜய் தமிழகம் திரும்புவார் எனக் கூறப்படுகிறது. |