உயர் நீதிமன்றத்தின் தீர்மானங்களை ஆராய்ந்ததன் பின்னரே நடவடிக்கை!

21.02.2024 09:28:45

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானங்களை ஆராய்ந்ததன் பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நீதி அமைச்சர், கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

சட்டமூலத்தின் சில சரத்துகள் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்மானங்களை விரிவாக ஆராய்ந்ததன் பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

 

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் பல சரத்துகளை அவ்வாறே நிறைவேற்றுவதாக இருந்தால் அதற்கு விசேட பெரும்பாமை தேவையென உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

சட்டமூலத்திலுள்ள மேலும் 2 சரத்துகளை அவ்வாறே நிறைவேற்றுவதாக இருந்தால் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன், சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஸ நாடாளுமன்றத்தில் நேற்று(20.02.24) தெரிவித்திருந்தார்.