நீதிமன்றம் செல்கிறது சங்கு கூட்டணி!

21.03.2025 08:22:56

எமது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடருவோம் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ் . மாவட்டத்தில் சில சபைகளில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அது தொடர்பில் அக் கட்சியின் சார்பில் ஊடகங்களுக்கு சுரேஷ் பிரேமச்சந்திரன் கருத்து தெரிவிக்கும் போது,

யாழ் . மாவட்டத்தில் உள்ள இரண்டு சபைகளை தவிர ஏனைய 15 சபைகளுக்குமான வேட்பு மனுக்களை நாம் கையளித்து இருந்தோம். அவற்றில் பல சபைகளில் எமது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

வடக்கு கிழக்கில் எம்மை ஓரம் கட்டி விட்டு ஆளும் கட்சி உள்ளிட்ட சில கட்சிகளை மாத்திரம் தேர்தலில் போட்டியிட வைக்கும் செயற்பாட்டை தேர்தல் திணைக்களம் செய்துள்ளதாகவே நாம் சந்தேகிக்கின்றோம். இது தொடர்பில் நாம் நீதிமன்றில் வழக்கு தொடர்பதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளோம் என மேலும் தெரிவித்தார்.