காசாவுக்குள் நுழைந்த உணவு வாகனங்களை சூழ்ந்த மக்கள்

01.03.2024 08:35:51

 

 

ஹமாஸ் இஸ்ரேல் யுத்தம் ஆரம்பித்த பின்னர் இடம்பெற்ற சம்பவங்களில் மிக மோசமான சம்பவம் என குறிப்பிடத்தக்க சம்பவம் வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.

காசாவில் உணவை பெறுவதற்காக பெருமளவில் திரண்டிருந்த மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டதில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

 

உணவுவாகனங்களை நோக்கி பெருமளவில் திரண்ட பசியின் பிடியில் சிக்கியுள்ள பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 117 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என பாலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

முற்றுகைக்குள்ளாகியுள்ள காசா பள்ளத்தாக்கில்  பசியும் பட்டினியும் பெருமளவில் காணப்படும் ஒரு சூழ்நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 இங்கு உணவுப்பொருட்களுடன் வாகனங்கள் வருவது குறைவு என்பதால் அவ்வாறான வாகனங்களை பார்த்தவுடன் பட்டினியில் சிக்குண்டுள்ள மக்கள் பதற்றம் ஏற்படுவது வழமை.

எனினும் என்ன நடந்தது என்பது குறித்து இஸ்ரேலும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களும் தெரிவித்த விடயங்களில் முரண்பாடுகள் உள்ளன.

 

என்ன நடந்தது?

காசாவின் மேற்குபகுதியில் உள்ள ஹரூன் அல் ரசீட் வீதியில் பெரும் குழப்பங்களிற்கு மத்தியில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

வியாழக்கிழமை காலை 18 உணவு வாகனங்கள் அந்த பகுதிக்கு வந்துள்ளன கட்டார் சவுதிஅரேபியா உட்பட பல நாடுகள் அனுப்பிய உணவு வாகனங்களைசுற்றி சுற்றி பசியுடன் காணப்பட்ட பாலஸ்தீனியர்கள் குவிந்தனர் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

புதிதாக வந்த உணவுப்பொருட்கள் ஏற்றப்பட்ட வாகனங்களை சுற்றி பொதுமக்கள் குவியத்தொடங்கியதும் இஸ்ரேலிய படையினர் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட ஆரம்பித்தனர் என  நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து உதவிப்பொருட்கள் ஏற்றப்பட்ட வாகனங்கள் அங்கிருந்து தப்பிவெளியேற முயன்றவேளை அவற்றினால் மோதுண்டு பலர் உயிரிழந்தனர் காயமடைந்தனர் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இடிபாடுகள் காரணமாக அம்புலன்ஸ்களால் உடனடியாக அந்த பகுதிக்கு செல்ல முடியாத நிலை காணப்பட்டது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலின் துப்பாக்கி பிரயோகத்திலிருந்து தப்பமுயன்ற உணவுவாகனங்கள் மோதியதால் பலர் உயிரிழந்துள்ளனர் என காசா பத்திரிகையாளர் காடெர் அல் ஜனுன் தெரிவித்துள்ளார்.

உணவை பெறுவதற்காக பெருமளவு மக்கள் காத்திருந்தனர் இஸ்ரேலிய படையினர் அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதும் ஏற்பட்ட குழப்பத்தினால் வாகனங்களால் பொதுமக்கள் மோதப்பட்டனர் என அவர் தெரிவித்துள்ளார்.

 

இஸ்ரேலிய படையினர் துப்பாக்கி பிரயோகத்தி;ல் ஈடுபட்டதால் ஏற்பட்ட குழப்பத்தினால் தப்பிச்செல்ல முயன்ற வாகனங்களால் மோதுண்டு பொதுமக்கள் உயிரிழந்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் தெரிவித்திருப்பது என்ன?

பாலஸ்தீனியர்கள் உணவுவாகனங்களை கொள்ளையடிக்க முயன்றவேளை தனது படையினர் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

அதிகாலையில் காசாவிற்குள் மனிதாபிமான பொருட்களுடன் வாகனங்கள் நுழைந்ததும் பொதுமக்கள் அந்த வாகனங்களை சூழ்ந்துகொண்ட பொருட்களை கொள்ளையடிக்க தொடங்கினர் இதன் போது ஏற்பட்ட தள்ளுமுள்ளில் பலர் காயமடைந்தனர் என இஸ்ரேல் முதலில் தெரிவித்தது.

பின்னர் உணவுவாகனங்கள் தொடர்பில் இரண்டு சம்பவங்கள் வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளன என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

முதலில் காசாவிற்குள் உணவுப்பொருட்கள் ஏற்றப்பட்ட வாகனங்கள் நுழைந்ததும் மக்கள் அவற்றை நோக்கி பெருமளவில் ஓடினார்கள் அதன்போது அவற்றினால் மோதுண்டு பலர் இறந்தனர் இதன் பின்னர் பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய படையினரை நோக்கி சென்றவேளை இஸ்ரேலிய படையினர் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

அதன் பின்னர் அந்த டிரக்குகள் வடபகுதியை நோக்கி சென்றன அங்கு தள்ளுமுள்ளு இடம்பெற்றது அதன் பின்னர் படையினருக்கு எதிரான சம்பவங்கள் இடம்பெற்றன எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.