அமெரிக்காவுடன் இணக்கப்பாடு இல்லை!

25.04.2025 14:36:49

அமெரிக்கா சென்ற இலங்கை பிரதிநிதிகள் குழு அங்கு வரி குறைப்பு தொடர்பில் எவ்வித இணக்கப்பாடுகளையும் எட்டியதாக எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் வியாழக்கிழமை (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஊழலைத் தடுப்பதற்கு நாம் அரசாங்கத்துக்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவோம். எனவே தேசிய மக்கள் சக்தி வெற்றி பெறாத உள்ளுராட்சி மன்றங்களுக்கு நிதி ஒதுக்குவதற்கு 1000 முறை சிந்திக்க வேண்டும் என ஜனாதிபதி கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஏதேனுமொரு உள்ளுராட்சிமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெறா விட்டால் அந்த பிரதேசத்தில் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட மாட்டாது என அரசாங்கம் விடுக்கும் மறைமுக அச்சுறுத்தலே இதுவாகும்.

2018 உள்ளுராட்சிமன்றங்கள் பெரும்பாலானவற்றை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே கைப்பற்றியது. ஆனால் அந்த சந்தர்ப்பத்தில் எமது நல்லாட்சி அரசாங்கமே ஆட்சியிலிருந்தது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் உள்ளுராட்சிமன்றங்களுக்கான நிதியை நிறுத்தவில்லை. ஆனால் அன்று சில பிரதேசசபைகளில் ஊழல், மோசடிகள் இடம்பெற்றன. அவற்றுடன் தொடர்புடையவர்கள் யார் என்பதையும் அனைவரும் அறிவர்.

அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு நாம் எமது முழுமையான ஒத்துழைப்பினை அரசாங்கத்துக்கு வழங்குவோம். பொருளாதார சுதந்திரம் குறித்து பேசும் போது மக்களுக்கான அபிவிருத்திகளை தடுப்பதற்கு எவருக்கும் உரிமை இல்லை. கடந்த இரு தேர்தல்களின் போது மக்கள் போதுமானளவு ஏமாற்றப்பட்டிருக்கின்றனர். எனவே இனியும் மேலும் மேலும் அவர்களை ஏமாற்ற முற்பட வேண்டாம் என்று அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.

அமெரிக்கா சென்ற இலங்கை பிரதிநிதிகள் குழு எந்தவித இணக்கப்பாட்டையும் எட்டியதாக எமக்கு தகவல் கிடைக்கவில்லை. இது தொடர்பில் வெளியிடப்படவுள்ளதாகக் கூறப்படும் கூட்டு அறிக்கையை எதிர்பார்த்திருக்கின்றோம். அந்த அறிக்கையின் ஊடாக வரி 44 சதவீதத்திலிருந்து எவ்வாறு குறைக்கப்பட்டிருக்கின்றது என்பதை அறிந்து கொள்ள முடியும். அவ்வாறில்லை எனில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படும்.

இது குறித்து ஜனாதிபதிக்கு நான் வழங்கிய ஆலோசனையில் நாட்டைச் சூழவுள்ள மதில்களை தகர்த்து பொருளாதார பாலங்களை அமைக்குமாறு குறிப்பிட்டிருந்தேன். ட்ரம்ப்பின் வரி அதிகரிப்பை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு நாம் எவ்வாறு ஏற்றுமதி வருமானத்தை தக்க வைத்துக் கொள்வது என்பதை சிந்திக்க வேண்டும். அவ்வாறில்லை எனில் இந்த அரசாங்கம் அடுத்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி வேகத்தை 3 சதவீதமாகக் குறைத்து விடும் என்றார்.