சீனப் பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர்.

15.10.2025 14:32:03

மக்கள் சீனக் குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தனது விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து இன்று (15) அதிகாலை நாடு திரும்பியுள்ளார்.

மூன்று நாள் உத்தியோகப்பூர்வ பயணத்தின் இறுதி நாளான நேற்றைய தினம் (14) பீஜிங்கில் அமைந்திருக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அருங்காட்சியகத்திற்கு பிரதமர் விஜயம் செய்தார்.

 

இந்தப் விஜயம் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றுப் பயணம் உள்ளிட்ட சீனாவின் பல தசாப்த கால சமூக மற்றும் பொருளாதார மாற்றங்கள் பற்றிய ஆழமான புரிதலைப் பெற அவருக்கு ஓர் வாய்ப்பாக அமைந்தது.

அருங்காட்சியக விஜயத்தைத் தொடர்ந்து பிரதமர் ஹரிணி, பீஜிங்கில் அமைந்திருக்கும் இலங்கைத் தூதரகத்திற்கு விஜயம் செய்தார். 

அங்கே,Huawei Technologies பிரதிநிதிகள், இலங்கையின் கல்வித் துறைக்கான சாத்தியமான பயன்பாடுகளைப் பற்றிப் பிரதமரிடம் எடுத்துரைத்ததோடு, ஸ்மார்ட் வகுப்பறை (Smart Classroom) பற்றிய அவர்களது கருத்துப்படிவத்தினைப் பிரதமரிடம் சமர்ப்பித்தனர்.

 

பின்னர், சீனாவில் தனது உத்தியோகபூர்வ பணிகளை முடித்துக்கொண்ட பிரதமர் நேற்று (14) இரவு பீஜிங்கிலிருந்து இலங்கை நோக்கிப் புறப்பட்டார்.

அதன்படி, இன்று அதிகாலை 4.45 மணிக்கு சீனாவின் குவாங்சோவிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-881 மூலம் நாட்டை வந்தடைந்தார்.

சீன மக்கள் குடியரசின் அழைப்பின் பேரில், 2025 பெண்கள் பற்றிய உலகத் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கடந்த 12 ஆம் திகதி சீனாவை சென்றடைந்தார்.

இந்த விஜயத்தின் போது, ​​பிரதமர் அமரசூரிய சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் சீன மக்கள் குடியரசின் பிரதமர் லி கியாங் ஆகியோருடன் பல உயர்மட்ட இருதரப்பு சந்திப்புகளிலும் பங்கேற்றமையும் குறிப்பிடத்தக்கது.